Monday 9 April 2012

தெளிவு குருவின் திருவடி!


வாஸ்தவம் தான்! துறவியின் குருநாதரிடம் கேள்விகள் கேட்கவே இங்கு வந்தேன்.  ஆனால் இப்பொழுதோ எனது அகமும் புறமும் அமைதி மயமாக இருக்கிறது.  இதில் கேள்விகள் எழவே மாட்டேன் என்கின்றனவே! 

"நண்பரே! எனது அத்மா இந்தக் கணம் நங்கூரத்தை விடுத்து ஒரு அற்புதமான கடலைக் கடக்கத் தயாரகவிருப்பது போல் தோன்றுகிறது. இந்தப் பெரும் பயணம் துவங்கும் நேரத்தில் என்னை இந்த அமைதியற்ற இக்கரை உலகிற்கு இழுக்க விரும்புகிறீரா?" என்று மனதில் கூறிக்கொண்டேன்.

இரண்டு மணி நேரமாக நீடித்த த்யானச் சூழ்நிலை கலைந்தது கலைந்ததுதான்.  எனது நண்பர் இப்படிப் பூசை வேளையில் கரடி போல் குறுக்கிட வேண்டுமென்று காத்திருந்தது போல, சிலர் தரையிலிருந்து எழுந்து ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தனர்.  சிலர் ஏதோ பேசினார்கள்.  ஆனால் என்னை ஆச்சரியக் கடலில் மூழ்கடிக்குமளவுக்கு ஒன்று நிகழ்ந்தது.  மகரிஷி தனது கருவண்டுக் கண்களை ஓரிரு முறைகள் இமைத்தார்.  சந்தேகமில்லை! பின்னர் அவர் தலையைத் திருப்பினார்.  முகம் மிக மிக மெல்லத் திரும்பி கீழே சற்றுத் தாழ்ந்து நின்றது.  ஒரு சில கணங்களுக்குப்பின் அவரது பார்வை நானிருந்த திக்கை நோக்கி நின்றது.  நான் வந்ததிலிருந்து முதன் முறையாக மகரிஷியின் அசாதரணமான பார்வை என்மேல் படிக்கிறது.  நிச்சயமாக அவர் நீண்ட சமாதி நிலையில் இருந்து வெளியே வந்து விட்டார்.

மகரிஷி பேசினார்.

"நீங்கள் இப்பொழுது கண்டது உங்களுக்கும் எல்லோருக்கும் பொதுவானதும் சாத்தியமானதுமான ஆழ்ந்த அமைதியின் ஒரு சிறு அனுபவம்.  இதற்கு பிறகும் உங்களைச் சந்தேகங்கள் தொந்தரவு செய்கின்றனவா?"

இந்த அமைதி உண்மையில் என்னை ஆட்க்கொண்டு பரவசப்படுத்துகிறது.  துறவியர் பக்கம் திரும்பி, "தற்சமயம் எந்தக் கேள்வியையும் கேட்க எனக்குத் தோன்றவில்லை.  பிறகு வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம்" என்றேன்.

துறவியாரே எழுந்து நின்று என்னை அறிமுகம் செய்து வைக்கிறார்.  மிக அழுத்தமாக தமிழில் பேசுகிறார்.  கைகளால் ஏராளமாக சைகைகள் காட்டிக் கொண்டு பேசுகிறார்.  கேட்பவர்களிடமிருந்து நடுநடுவே ஆச்சரியக் குரல் ஒலிகள் எழும்புவதை காணும் பொழுது அவர் நிஜத்துடன் கற்பனையையும் கணிசமாகச் சேர்க்கிறாரென்று எனக்குப் படுகிறது.

மதிய உணவு சாப்பிட்டு முடித்தோம்.  சூரியன் வானின் உச்சிக்குச் சென்று விட்டான்.  இந்த அளவிற்கு கடுமையான வெயிலை நான் இதுவரை கண்டதில்லை.  வெயிலின் கடுமை தாங்காமல் அநேகம் பேர்கள் ஓய்வெடுப்பதற்காக மரங்களின் நிழலுக்கு சென்று விட்டார்கள்.  ஆகவே நான் என்னிஷ்டப்படி சந்தடி இன்றி அமைதியாக மகரிஷியைப் போய்ப் பார்க்கலாம்.

நான் பெரிய ஹாலுக்குள் சென்று அவரருகே உட்காருகிறேன்.  சோபா மீதிருந்த சில வெள்ளைத் தலையணைகள் மீது சற்றே சாய்ந்தபடி இருக்கிறார்.  அன்பரொருவர் நிதானமாக ஒரு கயிற்றை இழுத்துப் பங்காவை இயக்குகிறார்.  காற்றினால் உண்டான மேல்லோசையும், அந்த புழுக்கமான இடத்தில் பங்கா மெதுவாக அசைந்து எழுப்பும் சிற்றொலியும் என் காதுகளுக்கு இனிமையாக இருந்தன.

மகரிஷி ஒரு மடிக்கப்பட்ட கைப்ப்ரதிப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதில் பரம நிதானத்துடன் என்னமோ எழுதிக் கொண்டிருந்தார்.  சில நிமிடங்கள் கழித்து அவர் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு ஒரு சீடரை அழைத்தார்.  அவரிடம் சிறிது பேசினார். பின் அச்சீடர் என்னிடம் அச்ரமச் சாப்பாடு எனக்கு ஒத்துக் கொள்ளாததால் அதை சாப்பிட முடியாததர்க்குத் தான் வருந்துவதாக மகரிஷி கூறுவதாகச் சொன்னார்.  சீடர் தொடர்ந்து, ஆஸ்ரமத்தில் மிக எளிய வாழ்க்கை வாழ்கிறார்கள்.  இதற்கு முன் ஐரோப்பியர்கள் இங்கு வந்து சாப்பிடாததால் அவர்களுடைய உணவுப் பழக்கங்கள் இவர்களுக்குத் தெரியாது, என்று விளக்கினார்.  நான் மகரிஷியிடம், "ரொம்ப நன்றி.  எனக்கு ஒன்றும் இதில் கஷ்டமில்லை.  இங்கே காரமில்லாத சாப்பாடு போடுகிறீர்கள்.  அதை சந்தோஷமாக சாப்பிடுவேன்.  உபரியாக, ஊருக்குள் போய் ஏதாவது வாங்கியும் சாப்பிடலாம்" என்றேன்.  மேலும் கூறினேன்.  "நான் உங்களது அச்ரமத்திர்க்கு எதைத் தேடி வந்தேனோ அதுதான் எனக்கு முக்கியமே தவிர சாப்பாடு விஷயத்தில் பிரச்சினையே இல்லை".

மகரிஷி நான் கூறுவதை மிகக் கவனமாக கேட்க்கிறார்.  அவர் முகம் சாந்தமாகவும், சலனம், சஞ்சலம் அற்றும் காணப்படுகிறது.  நான் கூறுவதை ஆமோதிப்பதாகவோ, ஆட்சேபிப்பதாகவோ எந்த அடையாளமுமில்லை.

"அது ரொம்ப சரி" என்று சற்றுப் பொறுத்துக் கூறினார்.

இந்த பதில் எனக்கு மிகத் தெம்பளித்தது.  நான் வந்த விஷயத்தைப் பற்றி விவரமாகச் சொல்ல தைரியம் வந்தது.

"சுவாமி! நான் எங்களது மேலை நாட்டுத் தத்துவங்களையும் வின் ஞானகளையும் நன்றாக படித்திருக்கிறேன்.  எங்கள் நகரங்களில் பல தரத்திலுள்ள மக்களுடன் வாழ்ந்து, வேலை செய்திருக்கிறேன்.  அவர்களது ஆசா பாசங்களிலும், இன்ப துன்பங்களிலும் பங்கு கொண்டு இருக்கிறேன்.  அதே நேரத்தில் நான் தன்னந்தனியான இடங்களிலும் இருந்திருக்கிறேன்.  ஏகாந்தமாக ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்ததுண்டு.  மேலை நாட்டுப் பேரறிஞ்சர்களை கண்டு பேசி என் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டுள்ளேன்.  எனக்கு இன்னும் தீராத சில சந்தேகங்களிருக்கின்றன.  ஓளி தேடி கீழை நாடுகளை நோக்கி என் பார்வை திரும்புகிறது " என்றேன்.

"சரிதான்.  புரிகிறது" என்பதுபோல் மகரிஷி தலையைச் சற்று அசைத்தார்.

"எத்தனையோ அபிப்ராயங்களையும், சித்தாந்தங்களையும் கேட்டிருக்கிறேன்.  நான் கேட்காத கோட்பாடுகளும், அவற்றை நிருபிக்கும் ஆதாரங்களுமில்லை, எனக்கு அலுத்து போய் விட்டது.  ஒருவன் தானே சொந்தமாக அனுபவித்து உணர முடியாதவற்றை எல்லாம் பற்றிப் பேசுவதிலும், எழுதுவதிலும் எனக்கு நம்பிக்கையே இல்லை.  சுவாமி! நான் இப்படி எல்லாம் பேசுவதை மன்னிக்க வேண்டுகிறேன்.  ஆனால் நான் மதத்தைக் கடைப் பிடிப்பவனல்லன்.  தயவு செய்து சூறுங்கள், மனிதனுடைய பொத்திக, லோகாயத வாழ்விற்கு அப்பால் எதேனுமுள்ளதா?  இருக்கிறதெனில் எனக்கு அந்த அனுபவம் நேர நான் என்ன செய்ய வேண்டும்?"

எங்களைச் சுற்றி அமர்ந்திருந்த மூன்று அல்லது நன்கு பக்தர்களின் கண்கள் வியப்பு மிகுதியால் அகல விரிந்தன.  ஒருவேளை நான் அதிகப் பிரசங்கம் செய்து விட்டேனோ? பக்தர்களின் நல்ல மரபை மீறி அவர்களுடைய குருநாதரிடம் அதி துணிச்சலாகவும், மிகுதியாகவும் பேசிவிட்டேனோ? இருக்கலாம்.  இல்லாமலிருக்கலாம்.  ஆனால் நான் என்ன செய்யட்டும்? பல்லாண்டுகளாக என் நெஞ்சில் சிறுகச் சிறுகச் சேர்ந்து குவிந்திருந்த ஆவலின் சுமை நானறியாமலேயே பீறிட்டுச் சொல் வடிவத்தில் வெளி வந்து விட்டது.  அப்படி ஒரு வேளை நான் சம்பிரதாயத்தை மீறி நடந்து கொண்டிருந்தாலும் மகரிஷி உண்மையில் பக்குவி என்றால் இதைப் பொருட் படுத்த மாட்டாரென்பது மட்டும் உறுதி.

மகரிஷி மொனமாக இருந்தார்.  ஆனால் எதோ சிந்தனயிலிருப்பவர் போன்று எனக்குத் தோன்றியது.  நானும் திறந்த மடையை மூட முடியாமல், வேறு என்ன செய்வதென்று தெரியாமலும் மூன்றாம் முறையாக வினவலுற்றேன்.

"மேலை நாடுகளில், எங்கள் சிந்தனையாளர்கள் அவர்களின் கூர்ந்த அறிவாற்றலின் பொருட்டு பெரிதும் போற்றப்படுகின்றனர்.  ஆனால் வாழ்க்கையின் உண்மை என்ன, தோற்றத்திற்குப் பின் மறைந்திருக்கும் யதார்த்தம் என்ன என்று கேட்டால் கையை விரித்து விடுகிறார்கள்.  தெரியவில்லை என்று ஒப்புக் கொள்கிறார்கள்.  மேலைநாட்டுச் சிந்தனையாளர்களால் விளக்க இயலாத உண்மையை உணர்ந்த ஞானிகள் சிலர் உங்கள் தேசத்திலிருப்பதாகச் சொல்கிறார்கள்.  இது உண்மை தானா?  நான் ஞானோதயம் பெறுவதற்கு நீங்கள் உதவி செய்வீர்களா? அல்லது இதைத் தேடுவதே மாயை தானா?"

நான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்ட படியால் மகரிஷி பேசுகிற வரையில் சும்மா இருப்பதை தீர்மானித்தேன்.  மகரிஷியின் பொருள் நிறைந்த, சிந்தனை செறிந்த பார்வை என்மீது படிந்தபடியே இருந்தது.  என் கேள்விகளைப் பற்றித்தான் ஆழமாகச் சிந்திந்துக் கொண்டிருக்கிறாரோ?  பத்து நிமிட நேரமாக ஒரே மௌனம்.

கடைசியாக மகரிஷியின் உதடுகள் அசைந்தன.  ஆனால் அவர் பேசியது தமிழல்ல.