Tuesday 24 July 2012

தெளிவு குருவின் திருவடி!


"இந்த மனிதர் எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை பெற்று விட்டார்.  அவரை எந்தத் துன்பமும் தீண்ட முடியாது".


என்னை ஆட்கொண்ட எண்ணமிதுதான்.

என்னுள் எழும் கேள்விகளுக்கு ஒலி வடிவம் கொடுத்து அவற்றிற்கு மகரிஷியிடமிருந்து விடைகளைப் பெற மீண்டுமொரு முறை முயன்று பார்க்கத் தீர்மானித்தேன். மகரிஷியின் பக்தர் ஒருவர் ஹாலை அடுத்த குடிசை ஒன்றில் ஏதோ வேலையாக இருந்தார்.  அவர் இவ்வளவு நாட்களாக என்னிடம் மிகவும் அன்பாக இருந்தவர். அவரயடுத்துச் சென்று அவருடைய குருநாதருடன் கடைசியாக ஒருமுறை உரையாட நான் தீவிரமாக விரும்பினேன் என்பதை கூறினேன்.  மகரிஷியிடம் நானே நேராகப் போய் பேசுவதில் எனக்குண்டான கூச்சத்தையும் மனம் விட்டுச் சொன்னேன். அவர் இதைக் கேட்டு மிகவும் ஆதரவாகப் புன்முறுவல் பூத்தார். அவர் உடனே ஹாலுக்குச் சென்றார். விரைவிலேயே நல்ல சேதி கொண்டு வந்தார்.  அவர் குருநாதர் என்னுடன் உரையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி கொள்வாராம்.

நான் ஹாலுக்கு விரைந்தேன்.  சோபாவினருகே உரையாடுவதக்குத் தகுந்த இடமாகப் பார்த்து உட்கார்ந்தேன்.

உடனேயே மகரிஷி முகத்தைத் திருப்பினார்.  அவரது உதடுகளில் ஒரு அன்பான புன்முறுவல் மலர்ந்தது.  உடனேயே என் தயக்கமெல்லாம் மறைந்து நான் சுதந்திரமாக அவரிடம் கேள்விகள் கேட்கலானேன்.

"சத்தியத்தைக் கண்டறிய விரும்புபவன் இந்த உலகத்தைத் துறந்து தனிமையான காடுகளுக்கோ, மலைகளுக்கோ சென்று விட வேண்டுமென யோகிகள் கூறுகிறார்கள்.  எங்கள் மேலை நாடுகளில் நாங்கள் வாழும் முறை வேறுபட்டது.  இப்படியெல்லாம் செய்வது முடியும் காரியமில்லையே.  நீங்கள் யோகிகள் கூறுவதை ஆமோதிக்கிறீர்களா?"

கம்பீரமாக தோற்றமளித்த ஒரு அந்தண பக்தர் பக்கம் திரும்புகிறார் மகரிஷி.  அவர் மகரிஷி கூறியதை எனக்காக மொழி பெயர்த்தார்.

"கர்மா வாழ்க்கையை துறக்க வேண்டிய அவசியமில்லை.  தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் த்யானம் செய்தால், பின் உங்கள் அன்றாடக் கடமைகளில் ஈடுபடுவது, அப்பொழுது எழும் அமைதியான மனநிலை நீங்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுதும், தொடர்ந்து நீடிக்கும்.  த்யான நேரத்து மனநிலை நீங்கள் உலகக் காரியங்களைச் செய்யும் பொழுதும் அவற்றில் பிரதிபலிக்கும்."

"அப்படி செய்வதால் உண்டாகும் விளைவு என்ன?"

"அப்படி செய்து வருங்கால், மனிதர்களிடம் நீங்கள் உறவாடும் விதத்திலும், வாழ்க்கையில் நேரிடும் சம்பவங்கள் மற்றும் உலகப் பொருட்கள் மீது நீங்கள் கொள்ளும் கருத்துக்களிலும் மெல்ல மெல்ல ஒரு மாறுதல் நிகழ்வதைக் காண்பீர்கள்.  உங்கள் செய்கைகளும் த்யானமாகவே ஆகிவிடும், உங்கள் முயர்ச்சியின்றியே".

"அப்படியானால் யோகிகள் கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, இல்லையா?" மகரிஷியை "ஆம்" அல்லது "இல்லை" என்று சொல்ல வைக்க என் முயற்சி இது.

ஆனால் மகரிஷி நேரடியாக பதில் சொன்னால் தானே!

"தன்னை இந்த உலகத்துடன் பந்தப்படுத்தும் சுயநலச் சிறுமையை விட்டுவிடுதல் வேண்டும்.  பொய்யான "நான்" அதாவது அகந்தையை விட்டு விடுதலே உண்மையான துறவு".

"சுயநலமேயின்றி இவ்வுலகில் செயல்படுவது எப்படி சாத்தியமாகும்?"

"கர்மம், ஞானம் இரண்டிற்கும் இடையே எவ்வித முரண்பாடுமில்லை".

"அப்படியானால் ஒருவன் வழக்கம்போல் தனது தொழில், உத்தியோகம் போன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தாலும் அவன் ஞானம் பெற முடியும் என்கிறீர்களா?"

"ஏன் முடியாது?  ஆனால் ஞானமடைந்தவன், இன்னும் இந்தக் காரியங்களைச் செய்து கொண்டிருப்பது பழைய ஆள்தான் என்று நினைக்க மாட்டான்.  ஏன் என்றால் அவனுடைய அகந்தை மனது மெல்ல மெல்ல மாறி அந்த சிறு மனதிற்கு அதீதமாயுள்ள தனது நிஜஸ்வரூபமாகிய ஆன்மாவில் ஒடுங்கிவிடும்.

"காரியங்களில் ஈடுபட்டுள்ளவனுக்கு, த்யானம் செய்யப் போதிய நேரமிருக்காதே?"

மகரிஷி சிறிது நேரம் மோனம் பாலித்தார், பிறகு விடையளித்தார்.


"த்யானத்திர்க்கென்று நேரம் ஒதுக்குவதெல்லாம் ஆன்மீக சாதனையில் புதிதாகப் பிரவேசித்தவர்களுக்குத்தான் வேண்டும்.சாதனையில் முன்னேறிக் கொண்டு வருபவன், காரியம் செய்கிறானோ செய்யவில்லையோ, ஆழமான அக அமைதியை அனுபவிப்பது நிச்சயம்.  கூட்டத்தின் நடுவிலிருந்துகொண்டு, பணியில் ஈடுபட்டுள்ள பொழுதே அவன் மனது ஏகாந்தத்தில் சாந்தமாக இருக்கும்".

"அப்படியானால் நீங்கள் யோக மார்க்கத்தைப் போதிப்பதில்லையா?"

"யோகியானவன், மாடு மேய்ப்பவன் காளையைத் தடி கொண்டு ஊக்குவிப்பது போன்று, தன் மனதை இலக்கை நோக்கிச் செலுத்துகிறான்.  இந்த மார்கத்திலோவேனில், சாதகன் முரட்டுக் காளையின் முன் பசும் புல்லைக் கட்டியே வழிக்கு கொண்டு வருகிறான்".

"அதை எப்படி செய்வது?"

"நான் யார்" என்ற கேள்வியை உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ள வேண்டும்.  இந்த விசாரம், முடிவில் உங்களை மனதிர்கப்பாலுள்ள ஒன்றைக் கண்டறிய வழி செய்யும்.  அந்தப் பெரும் கேள்விக்கு முதலில் விடை பெறுங்கள்.  அதன்மூலம் பிற கேள்விகளுக்குமே விடை பெறுவீர்கள்".

மகரிஷியின் விடையில் பொதிந்திருந்த ஆழ்ந்த பொருளைப் பற்றிய சிந்தனயிலாழ்ந்தேன்.  ஹாலில் மௌனம் நிலவியது.  அநேக இந்தியக் கட்டிடங்களை போலவே இங்கு சுவரில் பெரிய துளையிட்டு சதுரச் சட்டமும் கம்பியுமிட்டு ஜன்னலாகப் பயன்படுத்துகிறார்கள்.  அதன் வழியாகப் புனித அண்ணாமலையின் கீழ்ச் சரிவுகள் மிக அழகாகத் தெரிந்தன.  அதிகாலை சூரிய ஓளி அதன் விந்தையான வரி வடிவத்தை ரமணியமாக்கியது.

மகரிஷி மறுபடியும் என்னிடம் பேசினார்.

"வேறு விதமாகச் சொல்கிறேன்.  தூய ஆனந்தம் அனுபவிக்க வேண்டுமென்றுதான் எல்லா மனிதர்களும் எப்பொழுதும் விரும்புகிறார்கள்.  முடிவில்லாமல் தொடரும் ஆனந்தத்தைத் தேடி அதைப் பற்றிக் கொள்ள விரும்புகிறார்கள்.  இது ஒரு இயல்பான நாட்டமே.  ஆனால் எல்லோரும் தன்னையே மிக அதிகமாக நேசிக்கிரார்களே, இதைக் கவனித்து ஆச்சரியப்பட்டதில்லையா நீங்கள்?"

"ஆமாம். ஆனால் அதைக் கவனித்ததில்லை......."

"மனிதர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு சாதனத்தின் மூலம் - தெய்வ நம்பிக்கை மூலமாகவோ அல்லது வேறெந்த வழியிலேயோ - பரம சுகத்தை அடைய எப்பொழுதும் விரும்புகிறார்கள் இல்லையா?  இந்த உண்மையுடன் அதையும் இணைத்துப் பாருங்கள்.  மனிதனின் ஸ்வரூபத்தைப் பற்றி உங்களுக்கு ஒரு தடயம் கிடைக்கும்."

"நீங்கள் கூறுவது எனக்கு புரியவில்லையே!"

மகரிஷி இப்பொழுது குரலை உயர்த்திப் பேசினார்.

"மனிதனின் உண்மை இயல்பு ஆனந்தம்.  நிஜஸ்வரூபத்தில் ஆனந்தம் அதன் உண்மை இயல்பாகவே உள்ளது.  ஆனந்தத்தைத் தேடும் மனிதன் அவனறியாமலேயே தன் நிஜஸ்வரூபத்தைத் தான் தேடுகிறான்.  நிஜஸ்வரூபமாகிய ஆன்மா அழிவற்றது.  எனவே அதை அடையும் ஒருவன் முடிவில்லாத ஆனந்தத்தைப் பெறுகிறான்."

"ஆயின் உலகம் மாபெரும் துக்கத்தில் மூழ்கியிருக்கிறதே?"

"ஆமாம், உலக மக்கள் தம்மையே அறியாதிருப்பதுதான் அதற்குக் காரணம்.  எல்லா மனிதர்களும், தெரிந்தோ, தெரியாமலோ, ஆனந்தத்தையே நாடுகிறார்கள்."

"துஷ்டர்களும், குரூரமானவர்களும், தீமை செய்பவர்களும் கூடவா?" என்றேன்.

"அவர்கள் பாபம் செய்வது கூடத் தாம் செய்யும் ஒவ்வொரு பாபச் செயலிலும் தான் தேடும் சுகத்தை அடைய முயல்வதால்தான்.  இவ்வாறு சுகத்தை நாடுவது மனிதனின் இயல்புதான், ஆனால் சுகத்தைத் தேடும் தாம் தாங்கள் நிஜஸ்வரூபத்தையே தேடுகிறோம் என்பதறியாமல் இதுபோன்ற தீய வழிகள் மூலம் ஒருவேளை அந்த சுகம் கிடைக்குமா என்று முதலில் அவற்றைச் செய்து பார்க்கிறார்கள்.  ஆனால் தவறான செயல்கள், செய்பவனையே பாதிக்கின்றன."

"எனவே நாம் இந்த நிஜஸ்வரூபத்தை அறிந்தால் அழியா ஆனந்தம் பெறுவோமோ?"

மகரிஷி தலையாட்டி ஒப்புதல் தெரிவித்தார்.

திறந்திருந்த சாளரத்தின் வழியாக ஒரு சரிவான சூரிய கரணம் மகரிஷியின் முகத்தின் மீது படிந்தது.  பதட்டமேயற்ற அவர் புருவங்களில் தூய அமைதி நிலவியது.  அந்த உறுதியான அதரங்களில் திருப்தி மிளிர்ந்தது.  அந்தக் காந்தமிகு கண்களில் தேவாலயத்தில் நிலவும் சாந்தி மண்டிக் கிடந்தது.  அவரது தூய ஞானோபதேசத்திர்க்குக் கட்டியங் கூறியது, அவரது சுருக்கமே இல்லாத சுந்தர வதனம்.மகரிஷி பேசியதெல்லாம் மிக எளிய சொற்றொடர்கள்தான்.  அவர் எதை மனதில் வைத்துக் கொண்டு பேசினார்? மொழி பெயர்த்தவர் என்னென்னமோ கூறினார்.  ஆனால் அவரால் தெரிவிக்க முடியாத ஆழ்ந்த பொருள் மகரிஷியின் சொற்களில் பொதிந்திருந்தன.  அதை நான்தான் எனக்காகவே கண்டறிய வேண்டுமென்பதும் தெரிந்தது.  ஒரு தத்துவ அறிஞ்சர் போன்றோ அல்லது ஒரு பண்டிதர் போன்றோ தமது சித்தாந்தத்தை விளக்கி கூருவதர்க்காகச் சொற்களை கையாளுபவர் அல்லர் மகரிஷி. அவரது இதயத்தின் ஆழத்திலிருந்தே, அவரது பெறர்க்கரிய பேரான அத்மானுபூதியின் அடையாளமாகவே அன்றோ சொற்கள் வந்தன!

"நீங்கள் "தான்" "அது" என்று குறிப்பிடுவது எதனை? நீங்கள் கூறுவது உண்மையெனில், மனிதனுக்குள் இன்னொரு "தான்" இருக்கிறதென்று பொருள் படும் இல்லையா?"

மகரிஷி புன்முறுவல் பூத்தார்.

குருவருள் ......... தொடரும்!

Thursday 17 May 2012

தெளிவு குருவின் திருவடி!


கோவிலை சுற்றி பார்க்க விரும்பியதால், சென்று தரிசனம் பெற்று ஆஸ்ரமத்துக்கு திரும்பியபோது, இரவாகிவிட்டது.  ஆஸ்ரம தோட்டத்தில் மின்மினிப் பூச்சிகள் அங்குமிங்கும் சுற்றிப் பறக்கின்றன.  அப்பொழுது இருட்டின் பின் திரை மீது வினோதமான ஓளி கோலங்களை அவை வரைவதைப் பார்த்துக் கொண்டே தென்னை மரங்களால் சூழப்பட்ட ஆஸ்ரம முற்றத்திற்குள் நுழைகிறோம்.  ஹாலில் புகுந்து தரை மீது ஒரு ஆசனத்தில் அமர்ந்தேன்.  நான் வழியில் நுகர்ந்த உன்னதமான மோன அமைதி அங்கும் வியாபகமாகப் பரவி நிற்பதை உணர்ந்தேன்.


அங்கு கூடியிருந்த அன்பர்கள் தரைமேல் வரிசை வரிசையாக அமர்ந்திருந்தனர்,  எவ்விதமான அரவமோ, பேச்சோ இல்லை.  கால்களை மடித்துக் கொண்டு மூலையில் இருந்த சோபா மீது மகரிஷி அமர்ந்திருந்தார்.  அவரது முழங்கால்கள் மேல் அவர் உள்ளங்கைகள் படிந்திருப்பது அவருக்கே தெரியுமோ என்னவோ! என்ன எளிமை! என்ன அடக்கம்! ஆனாலும் என்ன பெரும்தன்மை, கண்ணியம்!  பண்டைய கிரேக்கத் தத்துவஞானி போன்று அவரது தலை நிமிர்ந்து அசைவின்றி நின்றது.  ஹாலின் எதிர் கோடியை அவரது கண்கள் சலனமின்றி நோக்கியவாறு இருந்தன,  அந்த அபூர்வமான சலனமின்மை எனக்கு இப்பொழுதும் ஒரு புதிராகவே இருந்தது,  விண்ணில் மாலையின் அந்திம ஒளிக்கதிர் மறைவதைச் சாளரத்தின் வழியாகக் கவனித்துக் கொண்டிருக்கிறாரா அல்லது இந்த பௌதீக உலகின் ஸ்மரணை கூட இல்லாமல் கனவு போன்ற ஒரு கற்பனை உலகில் முற்றிலும் ஆழ்ந்துள்ளாரா?

வழக்கம் போலவே ஊதுவத்தியின் புகை கூட்டம் எழும்பிக் கூரையின் உத்திரங்களில் முகில்கள் போன்று மிதக்கிறது.  என்னை ஆச்வாசபடுத்திக் கொண்டு மகரிஷி மீது என் பாரிவையை நிலை நிறுத்தினேன்.  ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு கண்களை மூட வேண்டும் போல் தோன்றவே கண் மூடினேன்.  மகரிஷியின் சான்னித்யத்தில் ஆழமாக ஊடுருவிய சூட்சுமமான அமைதி என்னைத் தாலாட்டி வேகமாக அரைத் தாக்கத்தில் அழுத்தியது.  இப்படியே சற்று நேரம் அரை நனவில் இருந்தேன்.  பிறகு நனவிலிருந்து நழுவி ஒரு நனவொத்த கனாக் கண்டேன்.

கனவில் நான் ஐந்து வயதுப் பாலகனானேன்.  மகரிஷியின் கையைப் பிடித்தவாறே புனித அருணாச்சல மலைமீது வளைந்து செல்லும் ஒரு கரடு முரடான பாதையில் நிற்கிறேன்.  ஆனால் அவர் என்னருகில் நெடிதுயர்ந்து நிற்பதைக் கண்டால் பலமடங்கு வளர்ந்துயர்ந்து விட்டார் போன்று தோன்றுகிறது.  ஆஸ்ரமத்திலிருந்து என்னை அழைத்துக் கொண்டு அந்த இரவின் மையிருட்டில் அந்தப் பாதை வழியாக செல்கிறார்.  இருவரும் மெதுவாகச் செல்கிறோம்.  சற்று நேரம் கழித்து சந்திரனும், தாரகைகளும் எங்களைச் சுற்றி ஒரு மங்கிய ஓளி தந்தன.  எப்பொழுது விழுமோ என்றவாறு நிலையற்று நின்ற பூதகரமான பாறைகளுக்கு நடுவிலும், கற்பாதையில் பிளவுகள் தென்பட்ட போதிலும், மகரிஷி எவ்வளவு ஜாக்கிரதையாக என்னை நடத்திச் சென்றார் என்பதைக் கவனித்தேன்,  மலையோ செங்குத்தானது.  எங்கள் ஏற்றம் வெகு நிதானம்.  பாறைகளுக்கு நடுவே குறுகிய பிளவுகளிலும், குட்டையான புதர்க் கூட்டங்களின் கீழேயும் மறைந்திருந்த சின்னசிறு ஆச்ரமங்களும், மனிதர் வாழ் குகைகளும் எங்கள் பார்வையில் பட்டன.

அவற்றைக் கடந்து நாங்கள் வெளியே செல்லும்பொழுது அவற்றுள் வசிப்பவர்கள் வெளியே வந்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.  அந்த தாரகைகளின் மங்கலான வெளிச்சத்தில் அவர்கள், நிழலுருவங்கலாகத் தோன்றினாலும், அவர்கள் உண்மையில் பல வகையான யோகியரே என இனங்கண்டு கொண்டேன்.  நாங்கள் எங்கும் நிற்காமல் தொடர்ந்து நடந்து அருணாச்சலத்தின் சிகரத்தை அடைந்தபிறகே நின்றோம்.  ஏதோ ஒரு மிக மிக முக்கியமான சம்பவம் எனக்கு நிகழப் போகிறதென்ற, இன்னதென்று புரியாத ஒரு எதிர்ப்பார்ப்புடன் என் இதயம் படபடத்தது.

மகரிஷி முகத்தைத் திருப்பி தனது கண்களை மிகவும் தாழ்த்தி என் முகத்தில் தனது பார்வையைச் செலுத்தினார்.  நானும் மிக ஆவலுடன் அவரை அண்ணாந்து நோக்கினேன்.  எனது இதயத்திலும் உள்ளத்திலும் ஒரு இனம் தெரியாத மாறுதல் வெகு வேகமாக நடந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன்.  என்னை இதுகாறும் ஆசை காட்டி ஆட்டிப்படைத்த உள்நோக்கங்களும், தாபங்களும் என்னை விட்டு அகலத் துவங்கின. என்னை இங்குமங்கும் அலைக்கழித்துக் கலங்க வைத்த ஆசைத் தூண்டில்கள் எல்லாம் வியத்தகு விரைவுடன் மறைந்தன.  எனது உற்றார் சுற்றாருடன் நான் கொண்டிருந்த உறவுகளைப் பாதித்த வெறுப்புகள், மனஸ்தாபங்கள், சிறுமைகள், சுயநலங்கள் யாவும் வெறுமையின் அதல பாதாளத்தில் போய் விழுந்து மறைந்தன,  ஒரு சொல்லொண்ணா அமைதி என்னுள் விரிந்து மலர்ந்தது.  இதற்குமேல் நான் வாழ்வில் எதுவும் வேண்டேன் என்று தெளிவாயிற்று.

சட்டென மகரிஷி என்னை மலையடிவாரத்தின் மீது என் பார்வையைச் செலுத்துமாறு பணித்தார்.  சொன்னபடியே நான் செய்தேன்.  நான் கண்டதென்ன! என்ன ஆச்சரியம்! கீழே அடிவாரத்தில் பூகோளத்தின் மேற்கத்திய அர்த்த கோலமே அங்கு நீண்டு விரிந்து கிடந்தது.  கோடிக்கணக்கான மக்கள் கூட்டத்தை அங்குக் கண்டேன்.  அவர்கள் மீது இரவின் இருட்டுக் கம்பளம் படிந்திருப்பினும், நான் அவற்றை உருவங்களின் திரளாக ஒருவாறு தெரிந்து கொண்டேன்.

மகரிஷியின் குரல் என் காதில் ஒலித்தது.  சொற்கள் மிக நிதானமாக வந்தன.

"நீங்கள் அங்குத் திரும்பிச் செல்லும்பொழுது, இக்கணம் நீங்கள் காணும் அக அமைதி அங்கும் தொடரும்.  ஆனால், அதற்காக ஒன்று மட்டும் நீங்கள் செய்தாக வேண்டும்.  "நான் இந்த உடல்", "நான் இந்த புத்தி" என்ற எண்ணத்தை இனிமேல் உதறி எறிந்து விட வேண்டும்.  இந்த அக அமைதி உங்களுள் ஆறுபோல் பாயும் பொழுது நீங்கள் அதுவாக ஆகிவிடுவதால் "நான்" என்ற தனித்தன்மையை இழக்க வேண்டியிருக்கும்.  "நான்" போனால் "தான்" ஆகலாம்.

அத்துடனே மகரிஷி ஒரு ஒளிக்கதிரின் ஒரு முனையை என் உள்ளங்கையில் இட்டார்.

இந்த அசாதாரண வகையில் நனவு போன்ற கனவில் இருந்து நான் மீண்டும் நனவுக்கு வந்தபொழுது அதன் உன்னதமான அனுபவம் என்னை ஊடுருவி வியாபிக்கும் உணர்வு தொடர்ந்து நீடித்தது.  நான் விழித்த கணமே மகரிஷியின் கண்கள் என் கண்களைச் சந்தித்தன.  அவர் முகம் என்னை நோக்கித் திரும்பியுள்ளது.  அவர் பார்வை என் கண்களுக்குள்ளே நிலைத்து நிற்கிறது.

அந்தக் கனவின் பொருள் என்ன? எனது சொந்த வாழ்வின் ஆசைகளும் நிராசைகளும் சிறிது நேரம் இல்லது போயின.  "நான்" என்று நானறிந்த என் மேல் கனவில் எனக்கேர்ப்பட்ட உதாசீனமும், பிற மனிதர்பால், கனவில் மலர்ந்த உணர்ச்சியும், நான் விழித்த பிறகு அகன்று விடவில்லை.  அது அபூர்வமான அனுபவம்.

ஆனால் ஒன்று.  இந்த கணவனுபவத்தில் நிஜமாகவே ஏதேனும் இருந்தால் கூட அது நிலைக்காது.  அந்த நேரம் எனக்கு இன்னும் வரவில்லை.

எவ்வளவு காலம் கனவில் மூழ்கியிருந்தேனோ?  ஹாலில் இருந்த அனைவரும் எழுந்து படுத்து உறங்குவதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தனர்.  நானும் படுத்துரங்கத் தயாரானேன்.

அந்த நீண்ட காற்றோட்ட வசதி குறைந்த ஹாலில் மிகவும், புழுக்கமாக இருந்ததால், வெளியே முற்றத்தில் படுக்கத் தீர்மானித்தேன்.  நரை தாடியுள்ள அன்பரொருவர் லாந்தர் விளக்கைப் பொருத்திக் கொடுத்து, அதைப் படுக்கையினருகே விடியுமட்டும் அணைக்காமல் வைத்திருக்கும்படி கூறினார்.  பாம்பு அல்லது சிறுத்தை போன்ற அழையா விருந்தாளிகள் வரக் கூடுமாதலால், விளக்கை ஏற்றி வைப்பது நல்லது; பொதுவாக விளக்கு எரிந்து கொண்டிருக்கும் இடத்திற்கு அவை வருவதில்லை.

கடினமான தரையில் மெத்தயின்றி படுத்ததால் தூக்கம் வர சில மணி நேரங்களாயிற்று.  மெதுவாக வரட்டுமே! அசைபோடுவதர்க்குத் தாராளமாக நினைவுகள் நிறைந்திருந்தன.  ஏனெனில் மகரிஷிகளைப் போன்ற ஒரு அபூர்வமான மனிதரை என் வாழ்நாளில் இதுவரை நான் கண்டதில்லை.

எனது வாழ்வில் மிக முக்கியமான திருப்பம் ஏற்படுத்தக் கூடிய ஏதோ ஒன்று மகரிஷிகளிடம் உள்ளதென்று தெரிந்தாலும், அது எப்படிப்பட்டது என்று எனக்குப் பிடிபடவில்லை.  அது புலன்களுக்குப்பார்ப்பட்டது; சிந்தனைக்கும் எட்டாதது; அது ஆன்மீகமான ஒன்றாக இருக்கலாம்.  அந்த இரவு நேரத்தில் அவரை நினைக்கும் பொழுதெல்லாம், நான் கண்ட நனவு போன்ற அந்த கனவை நினைவுகூரும் பொழுதெல்லாம், இனம் தெரியாத ஒரு விசித்திரமான உணர்ச்சி என்னுள் புகுந்து என் இதயத்தை ஏதோ மகத்தான இன்னதென்று சொல்ல முடியாத அனுபவத்தை எதிர் பார்த்துப் பட படக்க வைத்தது.

அடுத்த நாட்களில் மகரிஷியிடம் நெருங்கிப் பழக முயன்றேன்.  முயற்ச்சிகள் பலிக்கவில்லை.  இதற்கு மூன்று விதமான காரணங்கள் இருந்தன.  முதலாவதாக மகரிஷியிடம் பேச்சு, இல்லை எனுமளவிற்க்குக் குறைவு.  சல சலப்பு என்ற பேச்சு கிடையாது.  தர்க்கங்களிலும், வாதப் பிரதிவாதங்களிலும் அவருக்கு விருப்பம் கிடையாது.  கோட்பாடுகளிலும் அவர் கவனம் போவதே கிடையாது.  மேலும் தனது எண்ணங்கள் யாவையாகிலும் பிறர் அவற்றை ஏற்ற்றுக் கொள்ள வேண்டுமென்ற விருப்பமோ, தனக்குச் சீடர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் ஆசையோ மகரிஷிகளிடம் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

இரண்டாவது காரணம் நிச்சயமாக விநோதமானது.  ஆனாலும் உணமையானது.

குருவருள் ............................. தொடரும்!

Thursday 3 May 2012

தெளிவு குருவின் திருவடி!


மொழிபெயற்பாளரை விட்டு, என்னிடம் நேராக ஆங்கிலத்தில் மெதுவாகப் பேசினார்.  "நான் என்கிறீர்கள்.  நான் அறிய விரும்புகிறேன் என்கிறீர்கள்.  அந்த நான் என்பது யார், சொல்லுங்கள்".

இவர் என்ன சொல்லுகிறார் தெரியவில்லையே?  இவருடைய ஆங்கிலந்தான் எனக்கு புரியவில்லையா? என்று குழம்பினேன்.

உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லையே? என்றேன், வேறு வழி இல்லாமல்.

புரியவில்லையா?  கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்!

மகரிஷியின் சொற்கள் மறுபடியும் எனக்குப் புதிதாகவே இருந்தன.  என்ன பதில் சொல்வது? சட்டென்று ஒரு எண்ணம் கை கொடுத்து உதவியது.  விரலால் என்னைச் சுட்டிக் காட்டி, என் பெயரை சொன்னேன்.

"உங்களுக்கு அவரைத் தெரியுமா?  என்றார் புன் முறுவலுடன்."

"பிறந்ததிலிருந்தே தெரியுமே!" என்றேன் பதிலுக்கு புன்முறுவலுடன் நான்.

"ஆனால் அது உங்களுடைய உடல்தானே! நான் கேட்டதைத் திரும்பவும் சொல்கிறேன்.  சொல்லுங்கள், நீங்கள் யார்?"

இந்த அபூர்வமான கேள்விக்கு எனக்கு உடனடியாக ஒரு பதிலும் தோன்றவில்லை.

மகரிஷி தொடர்ந்தார்.

முதலில் அந்த "நான்" என்பது யார் என்று தெரிந்து கொள்ளுங்கள், பிறகு உண்மை விளங்கும்.

என்ன இது?  புதிருக்கு மேலே புதிராகப் போடுகிறாரே! என்று விழித்தேன்.  மனது வேலை செய்ய மறுத்தது.  வாய்விட்டுச் சொன்னேன் என் நிலையை.  மகரிஷிக்கு இப்பொழுது மொழி பெயர்ப்பாளர் உதவி தேவைப்பட்டது.  அவரது பதில் எனக்கு மெதுவாக ஆங்கிலத்தில் சொல்லப்பட்டது.

"வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை, உங்களுக்குள்ளேயே பாருங்கள்.  இதை மட்டும் சரியாக செயதீர்களாகில் உங்களுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை தானாகவே கிடைக்கும்."

என்னமோ தெரியவில்லை.  மகரிஷி பதிலெல்லாம் விசித்திரமாக இருக்கின்றனா.  இருந்தாலும் நான் விடவில்லை, கேள்வி தொடுத்தேன்.

"பின்னே என்ன செய்ய வேண்டும்? ஒரு வழி சொல்லுங்களேன்."

தன்னுடைய சொரூபத்தை ஆழ்ந்து விசாரிப்பதாலும் (அத்ம விசாரம்) இடைவிடா த்யானத்தாலும் அக ஓளி பெறலாம்."

"உண்மையை நாடி அடிக்கடி த்யானம் செய்துள்ளேன்.  முன்னேற்றம் இல்லையே?"

"முன்னேற்றமில்லை என்பது உங்களுகெப்படித் தெரியும்?  ஆன்மீக உலகில் தன்னுடைய முன்னேற்றத்தைக் கண்டு உணர்வது எளிதன்று."

"ஒரு குருவின் உதவி அவசியமா?"

"தேவைப்படலாம்."

"நீங்கள் கூறும் வழியின் மூலம் தன்னைத்தானே காண குருவானவர் ஒருவனுக்கு உதவ முடியுமா?"

"ஆன்ம விசாரத்திற்க்குத் தேவையான எல்லா உதவிகளையும் அவரால் தர முடியும்.  இதை சொந்த அனுபவத்தால் கண்டறியலாம்."

குருவின் உதவியால் ஞானம் பெறுவதற்கு எவ்வளவு காலமாகும்?"

"அது சாதகனின் மனபக்குவத்தைப் பொறுத்த விஷயம்.  வெடி மருந்தை ஓர் கணத்தில் பற்ற வைக்கலாம்.  கரியில் நெருப்புப் பிடிக்கவோ வெகு காலமாகும்."

குருநாதர்களைப் பற்றியோ அவர்கள் கையாளும் முறைகளைப் பற்றியோ பேசிக் கொண்டே இருப்பதில் மகரிஷிக்கு விருப்பமில்லை என்று எனக்கு ஒரு வினோதமான உள்ளுணர்வு ஏற்பட்டது.ஆனாலும் நான் ஒரு விடாகண்டனாகையால், இந்த உணர்வைச் சட்டை செய்யாமல் அவரிடம் இதைப்பற்றி இன்னமொரு கேள்வி கேட்டேன். கேள்வி கேட்டதே காதில் விழாதது போன்று முகத்தை வைத்துக் கொண்டு ஜன்னல் பக்கம் தலையைத் திருப்பி, அப்பாலுள்ள மலையின்  பரந்த காட்ச்சிகளைக் கண்டவாறு இருந்தார்.  பதிலுக்கு வேண்டிய அறிகுறியே இல்லை."பேசிக்கொண்டே இராதே, சொன்னதைப் புரிந்து கொள்" என்பதை மௌனமாகக் கூறியது புரிந்தது.  அந்த விஷயத்தை விட்டு வேறே கேள்வி கேட்டேன்.

"தற்பொழுது உலகின் நிலையைக் காணும்பொழுது வேதனையாக இருக்கிறது.  உலகின் எதிர்காலம் எப்படியிருக்குமோ என்ற கவலை உண்டாகிறது.  இதைப் பற்றி மகரிஷிகள் அபிப்ராயம் கூறவேண்டும்."

"எதிர் காலத்தைப் பற்றி ஏன் கவலைபடுகிறீர்கள்?" என்றார் மகரிஷி.  "நிகழ்காலத்தையே நீங்கள் சரியாக அறியவில்லையே! நிகழ்காலத்தைச் சரியாக புரிந்து கொண்டு வாழ்ந்தால், வருங்காலம் தன்னை தானே கவனித்துக் கொள்ளும்."

கேள்வியை என்னிடமே திருப்புகிறார் மகரிஷி;நான் அடங்கிப் போகபோவதில்லை; எனக்கு விடை கிடைத்தே ஆகவேண்டும்; ஏனெனில் மனித வாழ்வின் சிக்கல்களும், துன்பங்களும் மனிதர்களை வாட்டி எடுக்கும் உலகிலிருந்து வருபவன் நான்; இந்த காட்டிற்குள் அமைதியான சூழ்நிலையில் வாழ்வபர்களுக்கு அவ்வளவு பாதிப்பில்லை.

"உலகத்தில் விரைவில் நட்பும் பரஸ்பர உதவியும் நிலவும் சகாப்தம் துவங்கப் போகிறதா அல்லது யுத்தமும், சர்வ நாசமும் எதிர்பார்த்திருக்கின்றனவோ? என்றேன்."

நான் இப்படிக் கேட்டதை மகரிஷி ரசிக்கவில்லை என்று தோன்றியது.  ஆனாலும் பதிலளித்தார்.

"உலகத்தை ஆளும் ஒருவனிருக்கிறான். உலகத்தை ஒழுங்காக நடத்திச் செல்ல வேண்டியது அவன் பொறுப்பு.  உலகத்துக்கு உயிர் கொடுத்தவனுக்கு அதை எப்படிப் பேண வேண்டும் என்பது தெரியும். உலகத்தின் பாரம் அவன் தலைமீதே தவிர உங்கள் மீதல்ல."

"இருந்தாலும், விருப்பு, வெறுப்பு, பாரபட்சமின்றித் தெளிவாக எங்கும் காணும் போது, அந்த ஒருவனின் கருணைப் பார்வை எங்கு விழுகிறதெனத் தெரியவில்லையே." என்று புகார் கூறினேன்.

இந்தக் கேள்வி அவருக்கு பிடிக்கவில்ல என்று நினைத்தேன். ஆனால் விடை தருகிறார்.

"நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே தான் உலகமும் இருக்கும்.  தன்னையே முதலில் அறிந்து கொள்ளாமல் உலகத்தை அறிய முயல்வதால் என்ன பயன்?  சத்தியத்தை நாடுபவர்கள் இதுபோன்ற கேள்விகளில் மனதைச் செலுத்த வேண்டாம்.  அநேகம் பேர்கள் இதுபோன்ற விஷயங்களில் தாங்கள் சக்தியை வீணாக்குகிறார்கள்.  முதலில் உங்களை இயக்கும், உங்களுக்குள் இருக்கும் உணமையைக் கண்டறியுங்கள்; பின்னால் நீங்கள் எதன் ஒரு பகுதியோ அந்த உலகத்தைப் பற்றிய உண்மையை இப்போழுதைவிட நன்றாக உங்களால் அறிய முடியும்."

மகரிஷி பேசுவதைச் சட்டென நிறுத்தினார். நானும் வாய் திறக்கவில்லை.  ஒரு அன்பர் அருகில் வந்து இன்னொரு ஊதுவத்தியைப் பற்ற வைக்கிறார்.  அதன் நீலநிறப் புகை மேலே சுழன்று செல்வதைப் பார்க்கிறார் மகரிஷி. பின் அவரது கைப்ரதிப் புத்தகத்தை எடுத்துப் பிரித்து, விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறார். இப்பொழுது அவர் கவனத்திலிருந்து நான் அகன்று விட்டேன்.

மகரிஷி மறுபடியும் இப்படி என்னிடம் உதாசீனமாகவிருன்தது என் சுயமரியாதையைப் பாதித்தது. தரையில் உட்கார்ந்து ஒரு கால் மணி நேரம் காத்திருந்தேன்.  மேலும் பேசுவாரென்று எனக்குத் தோன்றவில்லை. சரி எங்கள் உரையாடல் முற்றுப் பெற்று விட்டதென்று உணர்ந்து, தரையில் இருந்து எழுந்து நின்று, கைகூப்பி விடை பெற்று அகன்றேன்.

குருவின் திருவடி ............. தொடரும்!

Monday 9 April 2012

தெளிவு குருவின் திருவடி!


வாஸ்தவம் தான்! துறவியின் குருநாதரிடம் கேள்விகள் கேட்கவே இங்கு வந்தேன்.  ஆனால் இப்பொழுதோ எனது அகமும் புறமும் அமைதி மயமாக இருக்கிறது.  இதில் கேள்விகள் எழவே மாட்டேன் என்கின்றனவே! 

"நண்பரே! எனது அத்மா இந்தக் கணம் நங்கூரத்தை விடுத்து ஒரு அற்புதமான கடலைக் கடக்கத் தயாரகவிருப்பது போல் தோன்றுகிறது. இந்தப் பெரும் பயணம் துவங்கும் நேரத்தில் என்னை இந்த அமைதியற்ற இக்கரை உலகிற்கு இழுக்க விரும்புகிறீரா?" என்று மனதில் கூறிக்கொண்டேன்.

இரண்டு மணி நேரமாக நீடித்த த்யானச் சூழ்நிலை கலைந்தது கலைந்ததுதான்.  எனது நண்பர் இப்படிப் பூசை வேளையில் கரடி போல் குறுக்கிட வேண்டுமென்று காத்திருந்தது போல, சிலர் தரையிலிருந்து எழுந்து ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தனர்.  சிலர் ஏதோ பேசினார்கள்.  ஆனால் என்னை ஆச்சரியக் கடலில் மூழ்கடிக்குமளவுக்கு ஒன்று நிகழ்ந்தது.  மகரிஷி தனது கருவண்டுக் கண்களை ஓரிரு முறைகள் இமைத்தார்.  சந்தேகமில்லை! பின்னர் அவர் தலையைத் திருப்பினார்.  முகம் மிக மிக மெல்லத் திரும்பி கீழே சற்றுத் தாழ்ந்து நின்றது.  ஒரு சில கணங்களுக்குப்பின் அவரது பார்வை நானிருந்த திக்கை நோக்கி நின்றது.  நான் வந்ததிலிருந்து முதன் முறையாக மகரிஷியின் அசாதரணமான பார்வை என்மேல் படிக்கிறது.  நிச்சயமாக அவர் நீண்ட சமாதி நிலையில் இருந்து வெளியே வந்து விட்டார்.

மகரிஷி பேசினார்.

"நீங்கள் இப்பொழுது கண்டது உங்களுக்கும் எல்லோருக்கும் பொதுவானதும் சாத்தியமானதுமான ஆழ்ந்த அமைதியின் ஒரு சிறு அனுபவம்.  இதற்கு பிறகும் உங்களைச் சந்தேகங்கள் தொந்தரவு செய்கின்றனவா?"

இந்த அமைதி உண்மையில் என்னை ஆட்க்கொண்டு பரவசப்படுத்துகிறது.  துறவியர் பக்கம் திரும்பி, "தற்சமயம் எந்தக் கேள்வியையும் கேட்க எனக்குத் தோன்றவில்லை.  பிறகு வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம்" என்றேன்.

துறவியாரே எழுந்து நின்று என்னை அறிமுகம் செய்து வைக்கிறார்.  மிக அழுத்தமாக தமிழில் பேசுகிறார்.  கைகளால் ஏராளமாக சைகைகள் காட்டிக் கொண்டு பேசுகிறார்.  கேட்பவர்களிடமிருந்து நடுநடுவே ஆச்சரியக் குரல் ஒலிகள் எழும்புவதை காணும் பொழுது அவர் நிஜத்துடன் கற்பனையையும் கணிசமாகச் சேர்க்கிறாரென்று எனக்குப் படுகிறது.

மதிய உணவு சாப்பிட்டு முடித்தோம்.  சூரியன் வானின் உச்சிக்குச் சென்று விட்டான்.  இந்த அளவிற்கு கடுமையான வெயிலை நான் இதுவரை கண்டதில்லை.  வெயிலின் கடுமை தாங்காமல் அநேகம் பேர்கள் ஓய்வெடுப்பதற்காக மரங்களின் நிழலுக்கு சென்று விட்டார்கள்.  ஆகவே நான் என்னிஷ்டப்படி சந்தடி இன்றி அமைதியாக மகரிஷியைப் போய்ப் பார்க்கலாம்.

நான் பெரிய ஹாலுக்குள் சென்று அவரருகே உட்காருகிறேன்.  சோபா மீதிருந்த சில வெள்ளைத் தலையணைகள் மீது சற்றே சாய்ந்தபடி இருக்கிறார்.  அன்பரொருவர் நிதானமாக ஒரு கயிற்றை இழுத்துப் பங்காவை இயக்குகிறார்.  காற்றினால் உண்டான மேல்லோசையும், அந்த புழுக்கமான இடத்தில் பங்கா மெதுவாக அசைந்து எழுப்பும் சிற்றொலியும் என் காதுகளுக்கு இனிமையாக இருந்தன.

மகரிஷி ஒரு மடிக்கப்பட்ட கைப்ப்ரதிப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதில் பரம நிதானத்துடன் என்னமோ எழுதிக் கொண்டிருந்தார்.  சில நிமிடங்கள் கழித்து அவர் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு ஒரு சீடரை அழைத்தார்.  அவரிடம் சிறிது பேசினார். பின் அச்சீடர் என்னிடம் அச்ரமச் சாப்பாடு எனக்கு ஒத்துக் கொள்ளாததால் அதை சாப்பிட முடியாததர்க்குத் தான் வருந்துவதாக மகரிஷி கூறுவதாகச் சொன்னார்.  சீடர் தொடர்ந்து, ஆஸ்ரமத்தில் மிக எளிய வாழ்க்கை வாழ்கிறார்கள்.  இதற்கு முன் ஐரோப்பியர்கள் இங்கு வந்து சாப்பிடாததால் அவர்களுடைய உணவுப் பழக்கங்கள் இவர்களுக்குத் தெரியாது, என்று விளக்கினார்.  நான் மகரிஷியிடம், "ரொம்ப நன்றி.  எனக்கு ஒன்றும் இதில் கஷ்டமில்லை.  இங்கே காரமில்லாத சாப்பாடு போடுகிறீர்கள்.  அதை சந்தோஷமாக சாப்பிடுவேன்.  உபரியாக, ஊருக்குள் போய் ஏதாவது வாங்கியும் சாப்பிடலாம்" என்றேன்.  மேலும் கூறினேன்.  "நான் உங்களது அச்ரமத்திர்க்கு எதைத் தேடி வந்தேனோ அதுதான் எனக்கு முக்கியமே தவிர சாப்பாடு விஷயத்தில் பிரச்சினையே இல்லை".

மகரிஷி நான் கூறுவதை மிகக் கவனமாக கேட்க்கிறார்.  அவர் முகம் சாந்தமாகவும், சலனம், சஞ்சலம் அற்றும் காணப்படுகிறது.  நான் கூறுவதை ஆமோதிப்பதாகவோ, ஆட்சேபிப்பதாகவோ எந்த அடையாளமுமில்லை.

"அது ரொம்ப சரி" என்று சற்றுப் பொறுத்துக் கூறினார்.

இந்த பதில் எனக்கு மிகத் தெம்பளித்தது.  நான் வந்த விஷயத்தைப் பற்றி விவரமாகச் சொல்ல தைரியம் வந்தது.

"சுவாமி! நான் எங்களது மேலை நாட்டுத் தத்துவங்களையும் வின் ஞானகளையும் நன்றாக படித்திருக்கிறேன்.  எங்கள் நகரங்களில் பல தரத்திலுள்ள மக்களுடன் வாழ்ந்து, வேலை செய்திருக்கிறேன்.  அவர்களது ஆசா பாசங்களிலும், இன்ப துன்பங்களிலும் பங்கு கொண்டு இருக்கிறேன்.  அதே நேரத்தில் நான் தன்னந்தனியான இடங்களிலும் இருந்திருக்கிறேன்.  ஏகாந்தமாக ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்ததுண்டு.  மேலை நாட்டுப் பேரறிஞ்சர்களை கண்டு பேசி என் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்டுள்ளேன்.  எனக்கு இன்னும் தீராத சில சந்தேகங்களிருக்கின்றன.  ஓளி தேடி கீழை நாடுகளை நோக்கி என் பார்வை திரும்புகிறது " என்றேன்.

"சரிதான்.  புரிகிறது" என்பதுபோல் மகரிஷி தலையைச் சற்று அசைத்தார்.

"எத்தனையோ அபிப்ராயங்களையும், சித்தாந்தங்களையும் கேட்டிருக்கிறேன்.  நான் கேட்காத கோட்பாடுகளும், அவற்றை நிருபிக்கும் ஆதாரங்களுமில்லை, எனக்கு அலுத்து போய் விட்டது.  ஒருவன் தானே சொந்தமாக அனுபவித்து உணர முடியாதவற்றை எல்லாம் பற்றிப் பேசுவதிலும், எழுதுவதிலும் எனக்கு நம்பிக்கையே இல்லை.  சுவாமி! நான் இப்படி எல்லாம் பேசுவதை மன்னிக்க வேண்டுகிறேன்.  ஆனால் நான் மதத்தைக் கடைப் பிடிப்பவனல்லன்.  தயவு செய்து சூறுங்கள், மனிதனுடைய பொத்திக, லோகாயத வாழ்விற்கு அப்பால் எதேனுமுள்ளதா?  இருக்கிறதெனில் எனக்கு அந்த அனுபவம் நேர நான் என்ன செய்ய வேண்டும்?"

எங்களைச் சுற்றி அமர்ந்திருந்த மூன்று அல்லது நன்கு பக்தர்களின் கண்கள் வியப்பு மிகுதியால் அகல விரிந்தன.  ஒருவேளை நான் அதிகப் பிரசங்கம் செய்து விட்டேனோ? பக்தர்களின் நல்ல மரபை மீறி அவர்களுடைய குருநாதரிடம் அதி துணிச்சலாகவும், மிகுதியாகவும் பேசிவிட்டேனோ? இருக்கலாம்.  இல்லாமலிருக்கலாம்.  ஆனால் நான் என்ன செய்யட்டும்? பல்லாண்டுகளாக என் நெஞ்சில் சிறுகச் சிறுகச் சேர்ந்து குவிந்திருந்த ஆவலின் சுமை நானறியாமலேயே பீறிட்டுச் சொல் வடிவத்தில் வெளி வந்து விட்டது.  அப்படி ஒரு வேளை நான் சம்பிரதாயத்தை மீறி நடந்து கொண்டிருந்தாலும் மகரிஷி உண்மையில் பக்குவி என்றால் இதைப் பொருட் படுத்த மாட்டாரென்பது மட்டும் உறுதி.

மகரிஷி மொனமாக இருந்தார்.  ஆனால் எதோ சிந்தனயிலிருப்பவர் போன்று எனக்குத் தோன்றியது.  நானும் திறந்த மடையை மூட முடியாமல், வேறு என்ன செய்வதென்று தெரியாமலும் மூன்றாம் முறையாக வினவலுற்றேன்.

"மேலை நாடுகளில், எங்கள் சிந்தனையாளர்கள் அவர்களின் கூர்ந்த அறிவாற்றலின் பொருட்டு பெரிதும் போற்றப்படுகின்றனர்.  ஆனால் வாழ்க்கையின் உண்மை என்ன, தோற்றத்திற்குப் பின் மறைந்திருக்கும் யதார்த்தம் என்ன என்று கேட்டால் கையை விரித்து விடுகிறார்கள்.  தெரியவில்லை என்று ஒப்புக் கொள்கிறார்கள்.  மேலைநாட்டுச் சிந்தனையாளர்களால் விளக்க இயலாத உண்மையை உணர்ந்த ஞானிகள் சிலர் உங்கள் தேசத்திலிருப்பதாகச் சொல்கிறார்கள்.  இது உண்மை தானா?  நான் ஞானோதயம் பெறுவதற்கு நீங்கள் உதவி செய்வீர்களா? அல்லது இதைத் தேடுவதே மாயை தானா?"

நான் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்ட படியால் மகரிஷி பேசுகிற வரையில் சும்மா இருப்பதை தீர்மானித்தேன்.  மகரிஷியின் பொருள் நிறைந்த, சிந்தனை செறிந்த பார்வை என்மீது படிந்தபடியே இருந்தது.  என் கேள்விகளைப் பற்றித்தான் ஆழமாகச் சிந்திந்துக் கொண்டிருக்கிறாரோ?  பத்து நிமிட நேரமாக ஒரே மௌனம்.

கடைசியாக மகரிஷியின் உதடுகள் அசைந்தன.  ஆனால் அவர் பேசியது தமிழல்ல.

Monday 26 March 2012

தெளிவு குருவின் திருவடி!


ஒரு மெல்லிய போர்வையைத் தரை மீது விரித்து அதன் மேல் சோபாவில் சிலைபோன்று வீற்று இருந்த மோன உருவத்தை ஆவலுடன் நோக்கினேன்.  அகலம் குறைவான மெல்லிய கோவணத்தைத் தவிர வேறு ஆடை எதுவும் மகரிஷிகளின் உடல் மீது இல்லை.  ஆனால் இந்த பிரதேசங்களில் இது ஒன்றும் அசாதாரணமில்லை.  மகரிஷிகளின் சருமம் சற்றே செப்பு நிறமாக இருப்பினும் தென் இந்தியர்களைப் பார்க்கும் பொழுது அவர் நல்ல சிகப்பு என்றே சொல்லலாம்.  அவர் நல்ல உயரமென்றும் வயது ஐம்பதிர்க்குச் சற்று கூடுதலாக இருக்குமென்றும் தோன்றியது.  நரைமுடியுடைய அவரது சிரத்தின் அமைப்பு நல்ல திருத்தமாக இருந்தது அவரது தோற்றத்திற்கு அது ஒரு சீரிய சிந்தனையாளரின் பொலிவைத் தந்தது.  மொத்தத்தில் அங்க அமைப்பில் அவர் இந்தியர்களைக் காட்டிலும் ஐரோப்பியர் போன்றே காணப்பட்டார்.

ஹாலில் பூரண மௌனம் நிலவியது.  அமைதியே உருவாகச் சலனமேதுமின்றி நாங்கள் உள்ளே நுழைந்ததே தெரியாதோ என்னும்படி அந்த மாமுனிவர் அமர்ந்திருந்தார்.  சோபாவின் மறுபக்கத்தில் அன்பரொருவர் தரை மீது உட்கார்ந்திருந்தார்.  முனிவருக்கு மேலே கட்டி இருந்த காக்கித் துணியால் தைக்கப்பட்ட பங்காவை இந்த அன்பர் கயிற்றினால் இழுக்கத் தொடங்கினார்.  அது எழுப்பிய ஓசை அங்கு நிலவிய மௌனத்தைக் கலைத்தது.  பங்காவின் கிர் கிர் என்ற தாளத்தை கேட்டவாறே சோபா மீதிருந்த மகரிஷியின் கண்களின் மீது எனது கண்களை ஆவலுடன் பதித்து அவர் என்னைப் பார்ப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.  மிகப் பெரியதுமில்லாமல் சிறிதாகவும் இல்லாமல் பாந்தமாகவும், கரும்பழுப்பு நிறமாக் இருந்த அவரது கண்கள் அகலத் திறந்திருந்தன.

நான் வந்திருப்பது அவருக்குத் தெரியுமோ, தெரியாதோ, அதற்கான அடையாளம் ஏதும் மகரிஷிகளிடம் காணப்படவில்லை.  எந்த அசைவுமின்றி ஒரு அமானுஷ்ய அமைதியுடன், சிலையைப் போல் வீற்றிருந்தார்.  வெகு வெகு தொலைவை நோக்கி கால தேசங்களை வெட்டவெளியைக் கடந்த ஆனந்தமான ஒரு சேய்மையை தாண்டி அவரது பார்வை சென்றது.  நான் அவரது பார்வையில் படவில்லை.  இந்த அசாதரணமான காட்சியைப் போன்று எங்கேயோ ஒருமுறை பார்த்தது போலிருந்தது.  என் நினைவுப் பெட்டியை குடைந்தேன்.  இதுவரை கண்டவர்களை எல்லாம் ஒவ் ஒருவராக ஆராய்ந்தேன்.  கல்லில் செதுக்கியதுபோல் அசைவேதுமின்றி அமர்ந்திருந்த "பேச முனிவர்" நினைவுக்கு வந்தார்.  சென்னைக்கருகே ஒரு ஒதுக்குப் புறமான குடிசையில் கண்டேனே அந்த மௌனி.  இப்பொழுது மகரிஷியிடம் நான் காணும் அபூர்வமான தேகச் சலனமின்மை அந்த மௌனியின் சிலை போன்ற தன்மையை வினோதமான வகையில் ஒத்துள்ளது.

ஒரு மனிதருடைய கண்களின் மூலம் அவரது உள்ளக்கிடக்கையை அறிந்து பட்டியல் போட்டு விடலாமென நான் பல்லாண்டுகளாக நம்பி வந்துள்ளேன்.  ஆனாலோ, மகரிஷிகளின் முன்னர் நான் தயங்கித் திகைத்து வியந்து நின்றேன்.

சொன்னால் நம்ப முடியாத நிதானத்துடன் நிமிடங்கள் ஊர்ந்து சென்றன.  இப்படியாக அரை மணி நேரம் சென்றதை சுவற்றில் தொங்கிய ஆஸ்ரம கடிகாரம் அறிவித்தது.  இன்னும் நத்தை வேகத்தில் நேரம் ஊர்ந்து ஒரு மணி நேரம் கடந்தது.  யாருமே வாய் திறக்கவில்லை.  எனது கவனம் சோபாவில் மௌனமாக அமர்ந்திருந்த மகரிஷிகளிடம் ஒருமுகப்பட்டு விடவே அவரைத் தவிர அங்கிருந்த மற்ற எல்லோரையும் நான் முற்றிலும் மறந்து விட்டேன்.  அவர் முன்னிருந்த அழகிய சிறு மேஜை மீது நான் வைத்த பழங்கள் கவனிப்பாரின்றி இருந்தது.

சென்னையில் நான் பேசா முனிவரை சந்தித்தபோது எனக்கு கிடைத்த வரவேற்ப்பு போன்றே தமது குருநாதரிடமும் கிடைக்குமென்று என்னுடன் துணை வந்த துறவியார் முன்னரே எச்சரிக்கவில்லை ஆதலால், பூரண உதாசீனம் போல் தோன்றிய இந்த வினோதமான வரவேற்ப்பு எனக்குத் திகைப்பூட்டியது.  இந்தச் சூழ்நிலையில் எந்த மேற்கத்தியனும் "பக்தர்கள் கண்டு ரசிப்பதர்க்காகத்தான் இந்த மனிதர் இப்படி நாடகம் போடுகிறாரோ?" என்று தான் முதலில் நினைப்பான்.  இதே நினைப்பு ஓரிரு முறை என்னுள் எழவே செய்தது.  ஆனால் உடனேயே அதை உதறி விட்டேன்.  மகரிஷிகளுக்கு சமாதி நிலையில் ஆழ்ந்துவிடும் பழக்கமுண்டு என்று துறவியார் என்னிடம் கூறியிராதிருந்தாலும் அவர் நிச்சயமாக சமாதியில்தான் இருக்கிறார் என்று நினைத்தேன்.  அடுத்தபடியாக "பார்மார்த்திகமான இந்தத் த்யானம் வெறும் பொருள் அற்ற சூன்ய நிலை தானோ?" என்ற எண்ணம் எழுந்த கொஞ்ச நேரம் நிலைத்தது.  ஆனால் இதற்கு விடை கிடைக்காத காரணத்தினால் மட்டுமே இந்த எண்ணத்தையும் விட்டு விட்டேன்.

காந்தம் இரும்பைக் கவர்வதுபோல் இந்த மனிதரிடமுள்ள ஏதோ ஒரு சக்தி என் கவனத்தை ஈர்க்கிறது.  எனது பார்வையை அவரைவிட்டு அகற்ற இயலவில்லை இந்த அபூர்வமான ஈடுபாடு மென்மேலும் வலுப்படவே என்னை எறேடுத்துக்கூடப் பாராமல் உதாசீனமாக இருந்தது குறித்து எனக்கு ஏற்பட்ட  ஆரம்பத் திகைப்பும், குழப்பமும் மெல்ல மெல்ல மறைந்தன.  இந்த அதிசயமான காட்சி ஒரு மணி நேரம் நீடித்து இரண்டாவது மணி நேரம் கடந்து கொண்டிருக்கும் பொழுது தான் நான் எனது மனதினுள்  ஒரு அமைதியான எதிர்ப்பில்லாத மாறுதல் மௌனமாக திகழ்ந்து கொண்டிருப்பதை உணரத் துவங்குகிறேன்.  ரயிலில் வரும்போது மிகுந்த சிந்தனையுடனும் நுட்பகாகவும் திருத்தமாகவும் தயாரித்த கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக நழுவி மறைந்தன.  இப்பொழுது எனக்கு அக்கேள்விகளக் கேட்டாலும் கேட்க்காவிட்டாலும் ஒன்றுதான்.  இதுவரை என்னைத் தொந்தரவு செய்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் எனக்கு பரவாயில்லை.  எனக்கு தெரிந்ததெல்லாம் ஒன்று தான்; அமைதி என்னருகே ஆறாகப் பெருகி ஓடிக் கொண்டிருக்கிறது; மகத்தான சாந்தி என் இதயத்தினுள் ஆழப் பாய்ந்து பரவுகிறது; சிந்தனைகளால் சித்திரவதைப்பட்ட எனது மூளை ஒரு வழியாகச் சற்று ஓய்வு பெறத் துவங்குகிறது.

இவ்வளவு காலமாக கிளிப்பிள்ளை பேசுகிறதுபோல் நான் திரும்ப திரும்ப என்னிடமே கேட்டுக் கொண்டிருந்த அந்தக் கேள்விகளை நினைத்தால் சிரிப்பு வருகிறது.  அவற்றைக் கேட்க்காமலேயே இவரிடமிருந்து நொடிப் பொழுதில் விடைகள் கிடைத்து விடுகின்றனவே.  நான் வாழ்ந்த வாழ்வும், கண்ட காட்ச்சிகளும் இங்கு எவ்வளவு சிறியனவாகத் தோன்றுகின்றன!  இங்கே எனக்குத் திடீரென்று ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.  மனிதனின் புத்தி தனக்குத்தானே பிரச்சினைகளை உருவாகிக் கொண்டு, இல்லாத அப்பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காண்பதில் பேரல்லப் படுகிறது.  இதுவரை புத்தியே பிரதானமெனக் கருதி வந்த என்போல் ஒருவன் மனதில் இத்தகைய புதிய கருத்து புகுவது விந்தையே.

இவ்வாறு நிதானமாக், நிலையாக வலுப்பட்டு வந்த ஆழ்ந்த மன அமைதி என்னை ஆட்கொள்ள விட்டேன்.  இரண்டு மணி நேரம் இந்தச் சரணாகதியில் கழிந்தது.  காலவிரயமாகிறதே, காலம் கடந்து செல்கிறதே என்று மனதில் எரிச்சல் உண்டாகவில்லை.  ஏனெனில் மனது தனக்குத் தானே சிருஷ்டித்துக் கொண்ட பிரச்சினச் சங்கிலிகள் உடைத்து எறியப்படுவதை உணர்கிறேன்.  பிறகு மெல்ல மெல்ல, எனது நனவு மண்டலத்தில் ஒரு புதிய கேள்வி படர்கிறது.

மகரிஷி எனப்படும் இவர் ஆன்ம அமைதியைப் பரப்புவது ஒரு மலர் தனது இதழ்களிலிருந்து நறுமணத்தை வெளியே பரப்புவது போல் அவ்வளவு இயல்பானதா?  என்னால் ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ள முடியுமென்று நான் கருதவில்லை.  ஆனால் பிறருடைய சக்தியை, தகுதியை என்னால் உணர முடிகிறது.  என்னுள்ளே அறிவுக்கெட்டாத சூட்சமமான வகையில் அமைதி பரவுவதற்கு நான் இப்பொழுது இந்த இடத்தில் இருப்பதுதான் காரணம் என்று என் மனதில் ஒரு சந்தேகம் உதிக்கிறதென்றால் நான் மகரிஷியின் சாந்நித்ய சக்தியை என் இதயத்தினுள் புரிந்து கொள்ளத் துவங்கி விட்டேன் என்றே பொருள்.  துன்புற்றுக் குழம்பிக் கொந்தளிக்கும் எனது உள்ளத்தில் பாய்ந்து பரவும் அமைதி எதோ ஒரு அணுக்கதிர் போன்ற ஆன்மீக சக்தியால், இந்த்ரியங்களுக்கப்பாற்பட்ட யாருமறியாத ஒரு சூட்ச்சுமச் சக்தியால் இவரிடமிருந்துதான் கிளம்பி என்னை அடைகிறதோ என்று என்னுள் வியப்பு எழுந்தது.  ஆனால் இந்த மனிதரோ நான் ஒருத்தன் இருப்பதே தெரியாதவர் போல் முழுக்க முழுக்க ஒரு சிலயைப்போல் அமர்ந்திருக்கிறாரே.

 அந்த மோனக் கடலில் முதன் முதலாக ஒரு சிற்றலை எழுந்தது.  யாரோ ஒருவர் என்னிடம் வந்து என் காதில் மென்குரலில் கேட்டார்" "மகரிஷிடளிடம் கேள்வி கேட்க விரும்பினீர்கள் இல்லையா?"

நிமிர்ந்து பார்த்தேன்!

குருவின் திருவடி ...... தொடரும்!

Wednesday 21 March 2012

தெளிவு குருவின் திருவடி!


"இப்பொழுது தானே சொன்னேன்" என்று புன்னகையுடன் கூறினார்.

"அருணாச்சல" என்ற பெயரில் "அருண" "அசல" என்று இரு பதங்கள் உள்ளன.  "அருண" என்றால் சிவப்பு.  "அசல" என்றால் மலை.  அதாவது "செம்மலை".  இங்குள்ள பெரிய கோவிலில் எழுந்தருளியுள்ள தெய்வத்தின் பெயரும் இதுவேயாதளால் இச்சொல்லை "புனித செம்மலை" என்று மொழி பெயர்ப்பது சரியாகும்" என்றார்.

"இந்த மலைக்கும் தீபத்திற்கும் என்ன சம்பந்தம்?"  என்றேன்.

"அதுவா? வருடத்திற்கு ஒருமுறை கோயிலின் பிரம்மோத்சவத்தை குருக்கள் கொண்டாடுவார்.  கோயிலில் பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை காட்டும் அதே நேரத்தில் மலை உச்சியில் பெரிய தீபம் ஏற்றப்படும்.  அது எரிவது நெய், கர்பூரன்களால் நிறைக்கப்பட்ட ஒரு பெரிய கொப்பரையில்.  பல நாட்கள் தொடர்ந்து எரியும் இந்தத் தீபம், பல மைல்கள் தொலைவிலிருந்தும் கண்ணுக்குத் தெரியும்.  தீபம் தெரிந்த உடனேயே அதைத் தரிசிப்பவர்கள் அதன் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவார்கள்.  ஒரு பெறும் தெய்வத்தின் நிழலில் நிற்கும் இந்த மலை பவித்திரமானது என்ற மக்களின் நம்பிக்கையின் புறச்சின்னமே இந்த வணக்கம்".

எங்கள் முன் அருணாசலம் வானோங்கி உயர்ந்து நின்றது.  சிவப்பு, பழுப்பு, சாம்பல் நிறப் பாறைகள் நிறைந்ததும் முது போன்று தெள்ளிய வானில் சில ஆயிரம் அடிகளுக்கு மேல் தனது தட்டையான தலையைச் செலுத்திக் கொண்டும் தன்னந்தனியே நிமிர்ந்து நிற்கும் இந்த ஏகாந்தமான பர்வதத்திக்குச் சிற்பி செதுக்காத ஒரு தனி அழகும், காம்பிர்யாகும் இருப்பதை மறுக்க முடியாது.

துறவியின் சொற்கள் எண்ணை உணர்ச்சி வயப்படுத்தினவோ அல்லது எனக்குத் தெரியாத வேறு காரணத்தினாலோ என்னவோ அந்த பவித்திரமான மலையைத் தன்னை மறந்து நான் நோக்கியபொழுது, அருணாச்சலத்தின் சரிவான ஏற்றத்தை வியப்புடன் கண்ணால் பருகிய பொழுது ஒரு வினோதமான பய பக்தியும், பிரமிப்பும் என்னுள் எழுவதை உணர்ந்தேன்.

மெல்லிய குரலில் என் காதினுள் துறவி, "இந்த மலை இருக்கிறது பாருங்கள், இது யாவரும் போற்றும் புனிதப் பொருள் மட்டுமில்லை, இந்த பூலோகத்தின் அத்யாத்ம மையத்தைக் காட்டவே இந்த மலையைத் தேவர்கள் இங்கு எழுப்பியுள்ளார்கள் எனவும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் நம்பி வருகிறார்கள், புராணங்களும் கூறுகின்றன" என்றார்.

மகரிஷியின் ஆஸ்ரமத்தை வண்டி நெருங்கியது.  சாலையை விட்டுத் திரும்பி மண்பாதை வழியாக வண்டி சென்றது.  தென்னை மற்றும் மாமரங்கள் நிரந்து அடர்ந்த ஒரு தொப்பை அடைந்தோம்.  அதையும் கடந்து சென்றால் ஒரு வாயிலருகே பாதை முடிவடைந்தது.  வாயில் மூடப்பட்டு இருந்தது, ஆனால் பூட்டப்படவில்லை.  வண்டிக்காரர் கீழே குதித்து வாயிலைத் தள்ளித் திறந்தார்.  பின் வண்டியிலேறி எங்களை ஒரு பெரிய முற்றத்திற்கு ஓட்டிச் சென்றார்.  இசிவேடுத்துப் போயிருந்த கை, கால்களை நீட்டி, மடக்கி சரி செய்து கொண்டு, தரையில் இறங்கி நாற்புறமும் கண்களை ஓட விட்டேன்.

ஒதுக்கமாய் அமைந்திருந்த மகரிஷிகளின் அருள் ராஜ்ஜியத்தின் பௌதீக எல்லைகள் இவைதான், முன் பகுதியில் நெருக்கமாக வளரும் மரங்கள் மற்றும் மிக அடர்த்தியான பூந்தோட்டம், பின் பகுதியிலும் கிழக்குப் பக்கத்திலும் சப்பாத்திகள்ளி மற்றும் புதர்களான வேலிகள்; மேற்க்கே காடாக வளர்ந்த புதர்கள், மரங்கள் செறிந்த வானமும், மழையின் அடிவாரத்தில் மிக ரமணீயமான சுட்ட்ருப்புறக் காட்ச்சியின் நடுவில் ஆஸ்ரமம் அமைந்துள்ளது.  மிகவும் ஆழ்ந்த தான வாழ்வு வாழ விழைபவர்களுக்கு இந்த ஏகாந்தமாக ஒதுங்கியுள்ள ஆஸ்ரமம் தகுந்த இடமாக இருக்க கூடும்.

முற்றத்தின் இடது புறத்தில் கூரை வேய்ந்த இரு சிறு கட்டிடங்கள் இருந்தன.  அதையடுத்து ஒரு நீண்ட சதுர வடிவ நவீன கட்டிடம், சிவப்பு ஓடுகள் வேய்ந்த கூரை. கூரை சுவர்களுக்கு வெளிப்புறம் சற்றுக் கீழே இறங்கியுள்ளது.  கட்டிடத்துக்கு முன் தளமிடப்பட்ட ஒரு சிறிய தாழ்வாரம்.

முற்றத்தின் மையத்தில் ஒரு பெரிய கிணறு.  சட்டை அணியாத ஒரு கருப்பு நிறம் கொண்ட சிறுவன் அதிலிருந்து மெதுவாக ஒரு வாளியில் தண்ணீரை இறைத்துக் கொண்டிருந்தான்.  வெளியே நாங்கள் வந்த சப்தம் கேட்டு சிலர் கட்டிடங்களிருந்து முட்ட்ரத்துக்கு வந்தனர்.  ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக உடை அணிந்திருந்தனர்.  ஒருவர் கோவணம் மட்டுமே அணிந்திருந்தார்.  நீங்கள் யார் என்று கேட்க்கும் தோரணையில் எல்லோரும் எங்களை உற்று பார்த்தனர்.  துறவிக்கு மிக உற்ச்சாகம், வாயெல்லாம் பல், அவர்களுடைய திகைப்பை இவர் மிகவும் ரசித்தார்.  அவர்களருகே சென்று தமிழில் என்னவோ சொன்னார்.  உடனே அவர்கள் முகங்களில் பெரிய மாறுதலேர்ப்பட்டது.முகங்கள் பிரகாசமாயின.  அனைவரும் மகிழ்ச்சியுடன் என்னைப் பார்த்தார்கள்.  எனக்கு அவர்களுடைய முக பாவங்களும் அவர்கள் நடந்து கொண்ட விதமும் மிகவும் பிடித்துப் போயின.

"போகலாம்! வாருங்கள்" என்றார் துறவி.

தாழ்வாரத்தின் வெளியே சற்று நின்றேன்.  பின் நான் காணிக்கையாகக் கொண்டு வந்திருந்த பழங்களைக் கையிலேந்திக் கொண்டு திறந்திருந்த கதவு வழியாக ஹாலுக்குள் நுழைந்தேன்.

சுமார் இருபது ஜோடிக் கண்கள் எங்கள் பக்கம் திரும்பின.  அவற்றின் சொந்தக்காரர்கள் தரையின் மீது அரை வட்டத்தில் அமர்ந்திருந்தனர்.  கடப்பாக் கற்கள் பதித்த கரும்பழுப்பு நிறத்துத் தரை.  அனைவரும் வலது பக்க ஓரத்திலிருந்து பவ்யமாகத் தள்ளியே உட்கார்ந்திருந்தனர்.  அவர்கள் அமர்ந்திருந்த டிக்கை நான் நோக்கினேன். 

அங்கே நீளமான வெள்ளை சோபாவில் ஒருவர் அமர்ந்திருந்தார்.

"இவர் தான் மகரிஷிகள், சந்தேகமே இல்லை" என்றது என் மனம்.

துறவியார் சோபாவை அணுகித் தரை மீது வீழ்ந்து வணங்கினார்.  கைகளை சேர்த்துத் தனது கண்களை அவற்றின் மேல் புதைத்தார்.

நாங்கள் ஹாலிற்குள் நுழைந்த திசையை, ஜன்னலின் வழியாக கண்ணிமைக்காது நோக்கிய வண்ணம் அமர்ந்திருந்தார் மகரிஷி.  காலை வெளிச்சம் மகரிஷிகள் மீது தெளிவாக படிந்திருந்தமையால் நான் அவரது முகத்தின் ஒவ்வொரு விவரத்தையும் மனதில் நன்கு குறித்துக் கொள்ள முடிந்தது.  அவர் தன் சிரத்தச் சற்றேனும் அசைக்கவில்லை.  எனவே அவரது கண் பரவில் விழும் எண்ணத்துடன் சோபாவின் அருகே அமைதியாகச் சென்றேன்.  பழங்களை அவர் முன் வினயமாக வைத்துவிட்டு இரண்டடி பின் சென்று நின்றேன்.

Wednesday 14 March 2012

தெளிவு குருவின் திருவடி!

தென் இந்திய ரயில்வேயின் சென்னை சந்திப்பிலிருந்து மணியும் நானும் சிலோன் போட் மெயிலில் ஏறி அமர்ந்தோம்.  பலமணி நேரங்களாக விதவிதமான காட்ச்சிகளை கடந்து புகை வண்டி உருண்டு ஓடியது.  வழி நெடுக நெல்வயல்களும், சின்னஞ்சிறு செம்மலைகளும், குளிர் நிழல் தரும் நெடிதுயர்ந்த தென்னந் தோப்புகளும், ஆங்காங்கு, நெல் வயல்களில் பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளுமாக காட்ச்சிகள் மாறி மாறித் தோன்றி மறைந்தன.

ஜன்னலருகில் அமர்ந்து நான் புறகாட்ச்சிகளைக் கண்களால் பருகிக் கொண்டிருக்கையில் சடுதியில் படரும் இந்திய மாலை இருள் புறக்காட்ச்சிகளை மறைத்தும், மனம் இதர சிந்தனையில் மூழ்கியது.  அந்த யோகி பிரம்மா கொடுத்த தங்க மோதிரத்தை அணிந்த நாள் முதற்கொண்டு எனக்கு நேர்ந்த வினோதமான சம்பவங்களை வியப்புடன் நினைவு கூர்ந்தேன்.  நான் போட்டிருந்த திட்டங்கள் மிகவும் மாறிவிட்டன.  எதிர்பாராத சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாக்கி கிழக்கே தொடர்ந்து செல்லும் எனது தீர்மானத்தை மாற்றி தென்திசையை நோக்கி என்னை அழைத்துச் செல்கின்றன.  இந்த தங்க மோதிரத்தில் பதித்துள்ள கல்லிற்கு ஒரு மர்மமான சக்தி உள்ளது என்று அந்த யோகி கூறியது உணமையாக இருக்குமோ என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.  எவ்வளவுதான் திறந்த மனத்துடன் இதை அணுக முயன்றாலும் தற்கால ரீதியில் சிந்தனை செய்து பழகிவிட்ட ஒரு மேலை நாட்டினனுக்கு இது போன்ற கருத்தை ஏற்பது கடினம் தான்.  இந்த பிரமையை மனதிலிருந்து உதறித் தள்ளினேன்.  ஆனாலும் எனதுள்ளே நிழலாடிய சந்தேகத்தை விரட்ட முடியவில்லை.  அருணை மலை ஆஸ்ரமத்தை நோக்கிச் செல்லும் எனது பயணம் ஒரு வினோதமான சக்தியின் வேலையாகவே தோன்றியது.  மகரிஷியை சந்திப்பதில் ஆர்வமில்லதிருந்த என்னை அவரை நோக்கி செலுத்தி விடுவதில் மனித சக்தியை மீறிய விதியின் கருவிகளாக இரு காஷாயமணிந்த மனிதர்கள் அமைந்த காரணம் என்ன?  வேறு தகுந்த சொல் கிட்டாததால் விதி என்று சொல்கிறேனே தவிர இந்தச் சொல்லை பொதுவான பொருளில் இங்கு எழுதவில்லை.  எந்த முக்கியத்துவமும் இல்லாத சில நிகழ்ச்சிகள் ஒரு சில சமயம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக திருப்பு முனையாக அமைவதைப் பழைய அனுபவங்கள் எனக்கு நன்கு உணர்த்தி இருக்கின்றன.

நாங்கள் ரயில் வண்டியை விட்டு இறங்கினோம்.  அத்துடன் மெயின் லைன் பயணம் முற்று பெற்றது.  இனி கிளை லைனில் போகவேண்டும்.  பிளாட்பாரத்தில் அரை இருட்டான காத்திருக்கும் அறையில் இரண்டு மணி நேரம் ரயிலுக்காக காத்திருந்தோம்.  எனது சகபயணி துறவியாரோ வெளியே நல்ல இருட்டாகவிருந்த பிளாட்பாரத்தில் முன்னும் பின்னுமாக நடை போட்டார்.  அவரது நெடிய உருவம் விண்மீன்களின் மங்கிய வெளிச்சத்தில் பாதி நிஜமாகவும் பாதி நிழலாகவும் தோற்றமளித்தது.  மிகவும் தாமதித்து ரயில் வண்டி ஒருவழியாக வந்து சேர்ந்தது.  குபுகுபுவென்று புகை விட்டுக் கொண்டு, எங்களை ஏற்றிக்கொண்டு கட கட வென்று உருண்டது.  எங்கள் பெட்டியில் இருந்த பயணிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

கண்ணை மூடினேன்.  தூக்கமும், கனவுமாக மாறி மாறி வந்தன.  சில மணி நேரங்களுக்குப்பின் எனது சகபயணி என்னை எழுப்பினார்.  எதோ ஒரு சிறிய ரயில் நிலையத்தில் வண்டி நின்றது.  இறங்கினோம். கூவென்று ஊளையிட்டுக் கொண்டு அமைதியான இருட்டைக் கிழித்துக் கொண்டு ரயில் சக்கரங்கள் உருண்டு ஓடின.  இரவு முற்றும் முடியவில்லை.  ஸ்டேஷனில் சிறிய காத்திருக்கும் அறைக்கு சென்றோம்.  யாரும் இல்லை.  சௌகர்யத்திற்கு வேண்டிய சாதனம் ஏதுமில்லை.  அங்கிருந்து சிறிய மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைத்துப் பொறுமையுடன் காத்திருந்தோம்.

பொழுது விடிவதின் அறிகுறிகள் தென்பட்டன.  பின்புற ஜன்னல் வழியாக கண்ணுக்குத் தெரிந்த பகுதிகளைப் பார்த்தேன்.  காலைப் பனியின் திரை வழி தூரத்தில் தனித்து நிற்கும் ஒரு குன்றின் வரிவடிவம் தெரியத் தொடங்கியது.  அடிப்பாகம் மிக விஸ்தாரமாகவும், நடுப்பாகம் நன்கு பரந்தும் இருந்தது.  அதிகாலைப் பனியால் மறைக்கப்பட்டிருந்த குன்றின் சிகரத்தைக் காண முடியவில்லை.

என்கூட வந்த துறவி வெளியே போய்ப் பார்த்து வரக் கிளம்பினார்.  அங்கே ஒருவர் தனது இரட்டைக் காளை மாட்டு வண்டியில் படுத்துக் குறட்டை விடுவதைக் கண்டார்.  சற்று குரல் கொடுத்ததும் வண்டிக்காரர் விழித்து, கிராக்கி தயாராக இருப்பதை உணர்ந்தார்.  நாங்கள் போக விரும்பிய இடத்தைச் சொன்னதும் அவர் மிகுந்த உற்சாகத்துடன் சம்மதித்தார்.

அந்த சிறிய இரண்டு சக்கர வண்டியையும் அதன் உட்பகுதியையும் பார்த்த எனக்கு நம்பிக்கை எழவில்லை.  வந்தது வரட்டும் என்று நாங்கள் ஏறி உட்கார்ந்ததும் எங்களுக்குப் பின்னால் வண்டிக்காரர் எங்களது சாமான்களைத் திணித்தார்.  ஒரு மனிதரால் எவ்வளவு குறுகிய இடத்தில் அமர முடியுமோ அவ்வளவு ஒண்டிக் கொண்டு அமர்ந்தார் துறவி.  தலை இடித்து விடாமலிருக்க கூனிக் குறுகிக் கொண்டு வெளியில் காலைத் தொங்க விட்டவாறு வண்டியின் பின்பகுதியில் அமர்ந்தேன்.  இடப் பிரச்சினை ஓரளவு சமாளிக்கப் படவே, "கிளப்புங்கள்" என்றோம்.

வண்டியில் பூட்டியிருந்த மாடுகள் சிறியவன ஆனாலும் வலுவானவை.  இருந்தாலும் வண்டியின் வேகம் குறைவுதான்.  மாடுகள் குஷியுடன் புழுதி படர்ந்த ரஸ்தாவில் சென்றன.  சட்டெனப் பொழுது விடிந்ததை உணர்ந்தேன்.

ரயில் நிலையத்தின் காத்திருக்கும் அறையில் இருந்து நான் கண்ட மலையின் அடிவாரத்தை வண்டி நெருங்கிய போது பிரகாசமான காலச் சூரிய ஒளியில் அச் செம்மலை பிரம்மாண்டமாகத் தோற்றமளித்தது.  பனி நீங்கி விட்டதால் மலை உச்சியையும் அதன் பின் நீல வானையும் காண முடிந்தது.  அது ஒரு மலைத் தொடர் அன்று.  செம்மலை, பழுப்பு பாறைகளினாலான ஒரு மாபெரும் குன்றே அது.  தனித்து நிற்கும் குன்றின் சரிவில் பெரும்பான்மையான இடங்களில் செடி கொடி ஏதுமில்லை.  அங்குமிங்குமாக பாறைகள் ஏராளமாகச் சிதறிக் கிடந்தன.

என் பார்வை செல்லும் திக்கை கவனித்த துறவி "இதுதான், அருணாசலம்! புனிதமான செம்மலை!" என்றார்.  இதைக் கூறும்போது அவரது முகத்தில் பக்தியின் பரவசம் படர்ந்தது.  அக்கணத்தில் அவரைப் பார்த்த பொழுது பழங்காலத்து கிறிஸ்தவ அடியார்கள் மெய்மறந்து நிற்கும் படங்கள் நினைவுக்கு வந்தன.

"அருணாசலம் என்றால் என்ன?" என்றேன்!

குருவின் திருவடி தொடரும்.....