Wednesday 14 March 2012

தெளிவு குருவின் திருவடி!

தென் இந்திய ரயில்வேயின் சென்னை சந்திப்பிலிருந்து மணியும் நானும் சிலோன் போட் மெயிலில் ஏறி அமர்ந்தோம்.  பலமணி நேரங்களாக விதவிதமான காட்ச்சிகளை கடந்து புகை வண்டி உருண்டு ஓடியது.  வழி நெடுக நெல்வயல்களும், சின்னஞ்சிறு செம்மலைகளும், குளிர் நிழல் தரும் நெடிதுயர்ந்த தென்னந் தோப்புகளும், ஆங்காங்கு, நெல் வயல்களில் பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளுமாக காட்ச்சிகள் மாறி மாறித் தோன்றி மறைந்தன.

ஜன்னலருகில் அமர்ந்து நான் புறகாட்ச்சிகளைக் கண்களால் பருகிக் கொண்டிருக்கையில் சடுதியில் படரும் இந்திய மாலை இருள் புறக்காட்ச்சிகளை மறைத்தும், மனம் இதர சிந்தனையில் மூழ்கியது.  அந்த யோகி பிரம்மா கொடுத்த தங்க மோதிரத்தை அணிந்த நாள் முதற்கொண்டு எனக்கு நேர்ந்த வினோதமான சம்பவங்களை வியப்புடன் நினைவு கூர்ந்தேன்.  நான் போட்டிருந்த திட்டங்கள் மிகவும் மாறிவிட்டன.  எதிர்பாராத சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக உருவாக்கி கிழக்கே தொடர்ந்து செல்லும் எனது தீர்மானத்தை மாற்றி தென்திசையை நோக்கி என்னை அழைத்துச் செல்கின்றன.  இந்த தங்க மோதிரத்தில் பதித்துள்ள கல்லிற்கு ஒரு மர்மமான சக்தி உள்ளது என்று அந்த யோகி கூறியது உணமையாக இருக்குமோ என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.  எவ்வளவுதான் திறந்த மனத்துடன் இதை அணுக முயன்றாலும் தற்கால ரீதியில் சிந்தனை செய்து பழகிவிட்ட ஒரு மேலை நாட்டினனுக்கு இது போன்ற கருத்தை ஏற்பது கடினம் தான்.  இந்த பிரமையை மனதிலிருந்து உதறித் தள்ளினேன்.  ஆனாலும் எனதுள்ளே நிழலாடிய சந்தேகத்தை விரட்ட முடியவில்லை.  அருணை மலை ஆஸ்ரமத்தை நோக்கிச் செல்லும் எனது பயணம் ஒரு வினோதமான சக்தியின் வேலையாகவே தோன்றியது.  மகரிஷியை சந்திப்பதில் ஆர்வமில்லதிருந்த என்னை அவரை நோக்கி செலுத்தி விடுவதில் மனித சக்தியை மீறிய விதியின் கருவிகளாக இரு காஷாயமணிந்த மனிதர்கள் அமைந்த காரணம் என்ன?  வேறு தகுந்த சொல் கிட்டாததால் விதி என்று சொல்கிறேனே தவிர இந்தச் சொல்லை பொதுவான பொருளில் இங்கு எழுதவில்லை.  எந்த முக்கியத்துவமும் இல்லாத சில நிகழ்ச்சிகள் ஒரு சில சமயம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக திருப்பு முனையாக அமைவதைப் பழைய அனுபவங்கள் எனக்கு நன்கு உணர்த்தி இருக்கின்றன.

நாங்கள் ரயில் வண்டியை விட்டு இறங்கினோம்.  அத்துடன் மெயின் லைன் பயணம் முற்று பெற்றது.  இனி கிளை லைனில் போகவேண்டும்.  பிளாட்பாரத்தில் அரை இருட்டான காத்திருக்கும் அறையில் இரண்டு மணி நேரம் ரயிலுக்காக காத்திருந்தோம்.  எனது சகபயணி துறவியாரோ வெளியே நல்ல இருட்டாகவிருந்த பிளாட்பாரத்தில் முன்னும் பின்னுமாக நடை போட்டார்.  அவரது நெடிய உருவம் விண்மீன்களின் மங்கிய வெளிச்சத்தில் பாதி நிஜமாகவும் பாதி நிழலாகவும் தோற்றமளித்தது.  மிகவும் தாமதித்து ரயில் வண்டி ஒருவழியாக வந்து சேர்ந்தது.  குபுகுபுவென்று புகை விட்டுக் கொண்டு, எங்களை ஏற்றிக்கொண்டு கட கட வென்று உருண்டது.  எங்கள் பெட்டியில் இருந்த பயணிகளை விரல் விட்டு எண்ணி விடலாம்.

கண்ணை மூடினேன்.  தூக்கமும், கனவுமாக மாறி மாறி வந்தன.  சில மணி நேரங்களுக்குப்பின் எனது சகபயணி என்னை எழுப்பினார்.  எதோ ஒரு சிறிய ரயில் நிலையத்தில் வண்டி நின்றது.  இறங்கினோம். கூவென்று ஊளையிட்டுக் கொண்டு அமைதியான இருட்டைக் கிழித்துக் கொண்டு ரயில் சக்கரங்கள் உருண்டு ஓடின.  இரவு முற்றும் முடியவில்லை.  ஸ்டேஷனில் சிறிய காத்திருக்கும் அறைக்கு சென்றோம்.  யாரும் இல்லை.  சௌகர்யத்திற்கு வேண்டிய சாதனம் ஏதுமில்லை.  அங்கிருந்து சிறிய மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி வைத்துப் பொறுமையுடன் காத்திருந்தோம்.

பொழுது விடிவதின் அறிகுறிகள் தென்பட்டன.  பின்புற ஜன்னல் வழியாக கண்ணுக்குத் தெரிந்த பகுதிகளைப் பார்த்தேன்.  காலைப் பனியின் திரை வழி தூரத்தில் தனித்து நிற்கும் ஒரு குன்றின் வரிவடிவம் தெரியத் தொடங்கியது.  அடிப்பாகம் மிக விஸ்தாரமாகவும், நடுப்பாகம் நன்கு பரந்தும் இருந்தது.  அதிகாலைப் பனியால் மறைக்கப்பட்டிருந்த குன்றின் சிகரத்தைக் காண முடியவில்லை.

என்கூட வந்த துறவி வெளியே போய்ப் பார்த்து வரக் கிளம்பினார்.  அங்கே ஒருவர் தனது இரட்டைக் காளை மாட்டு வண்டியில் படுத்துக் குறட்டை விடுவதைக் கண்டார்.  சற்று குரல் கொடுத்ததும் வண்டிக்காரர் விழித்து, கிராக்கி தயாராக இருப்பதை உணர்ந்தார்.  நாங்கள் போக விரும்பிய இடத்தைச் சொன்னதும் அவர் மிகுந்த உற்சாகத்துடன் சம்மதித்தார்.

அந்த சிறிய இரண்டு சக்கர வண்டியையும் அதன் உட்பகுதியையும் பார்த்த எனக்கு நம்பிக்கை எழவில்லை.  வந்தது வரட்டும் என்று நாங்கள் ஏறி உட்கார்ந்ததும் எங்களுக்குப் பின்னால் வண்டிக்காரர் எங்களது சாமான்களைத் திணித்தார்.  ஒரு மனிதரால் எவ்வளவு குறுகிய இடத்தில் அமர முடியுமோ அவ்வளவு ஒண்டிக் கொண்டு அமர்ந்தார் துறவி.  தலை இடித்து விடாமலிருக்க கூனிக் குறுகிக் கொண்டு வெளியில் காலைத் தொங்க விட்டவாறு வண்டியின் பின்பகுதியில் அமர்ந்தேன்.  இடப் பிரச்சினை ஓரளவு சமாளிக்கப் படவே, "கிளப்புங்கள்" என்றோம்.

வண்டியில் பூட்டியிருந்த மாடுகள் சிறியவன ஆனாலும் வலுவானவை.  இருந்தாலும் வண்டியின் வேகம் குறைவுதான்.  மாடுகள் குஷியுடன் புழுதி படர்ந்த ரஸ்தாவில் சென்றன.  சட்டெனப் பொழுது விடிந்ததை உணர்ந்தேன்.

ரயில் நிலையத்தின் காத்திருக்கும் அறையில் இருந்து நான் கண்ட மலையின் அடிவாரத்தை வண்டி நெருங்கிய போது பிரகாசமான காலச் சூரிய ஒளியில் அச் செம்மலை பிரம்மாண்டமாகத் தோற்றமளித்தது.  பனி நீங்கி விட்டதால் மலை உச்சியையும் அதன் பின் நீல வானையும் காண முடிந்தது.  அது ஒரு மலைத் தொடர் அன்று.  செம்மலை, பழுப்பு பாறைகளினாலான ஒரு மாபெரும் குன்றே அது.  தனித்து நிற்கும் குன்றின் சரிவில் பெரும்பான்மையான இடங்களில் செடி கொடி ஏதுமில்லை.  அங்குமிங்குமாக பாறைகள் ஏராளமாகச் சிதறிக் கிடந்தன.

என் பார்வை செல்லும் திக்கை கவனித்த துறவி "இதுதான், அருணாசலம்! புனிதமான செம்மலை!" என்றார்.  இதைக் கூறும்போது அவரது முகத்தில் பக்தியின் பரவசம் படர்ந்தது.  அக்கணத்தில் அவரைப் பார்த்த பொழுது பழங்காலத்து கிறிஸ்தவ அடியார்கள் மெய்மறந்து நிற்கும் படங்கள் நினைவுக்கு வந்தன.

"அருணாசலம் என்றால் என்ன?" என்றேன்!

குருவின் திருவடி தொடரும்..... 

1 comment:

  1. இது உயர்திரு பால் பிரண்டன் பற்றியதா ?

    ReplyDelete