Thursday, 3 May 2012

தெளிவு குருவின் திருவடி!


மொழிபெயற்பாளரை விட்டு, என்னிடம் நேராக ஆங்கிலத்தில் மெதுவாகப் பேசினார்.  "நான் என்கிறீர்கள்.  நான் அறிய விரும்புகிறேன் என்கிறீர்கள்.  அந்த நான் என்பது யார், சொல்லுங்கள்".

இவர் என்ன சொல்லுகிறார் தெரியவில்லையே?  இவருடைய ஆங்கிலந்தான் எனக்கு புரியவில்லையா? என்று குழம்பினேன்.

உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லையே? என்றேன், வேறு வழி இல்லாமல்.

புரியவில்லையா?  கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்!

மகரிஷியின் சொற்கள் மறுபடியும் எனக்குப் புதிதாகவே இருந்தன.  என்ன பதில் சொல்வது? சட்டென்று ஒரு எண்ணம் கை கொடுத்து உதவியது.  விரலால் என்னைச் சுட்டிக் காட்டி, என் பெயரை சொன்னேன்.

"உங்களுக்கு அவரைத் தெரியுமா?  என்றார் புன் முறுவலுடன்."

"பிறந்ததிலிருந்தே தெரியுமே!" என்றேன் பதிலுக்கு புன்முறுவலுடன் நான்.

"ஆனால் அது உங்களுடைய உடல்தானே! நான் கேட்டதைத் திரும்பவும் சொல்கிறேன்.  சொல்லுங்கள், நீங்கள் யார்?"

இந்த அபூர்வமான கேள்விக்கு எனக்கு உடனடியாக ஒரு பதிலும் தோன்றவில்லை.

மகரிஷி தொடர்ந்தார்.

முதலில் அந்த "நான்" என்பது யார் என்று தெரிந்து கொள்ளுங்கள், பிறகு உண்மை விளங்கும்.

என்ன இது?  புதிருக்கு மேலே புதிராகப் போடுகிறாரே! என்று விழித்தேன்.  மனது வேலை செய்ய மறுத்தது.  வாய்விட்டுச் சொன்னேன் என் நிலையை.  மகரிஷிக்கு இப்பொழுது மொழி பெயர்ப்பாளர் உதவி தேவைப்பட்டது.  அவரது பதில் எனக்கு மெதுவாக ஆங்கிலத்தில் சொல்லப்பட்டது.

"வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை, உங்களுக்குள்ளேயே பாருங்கள்.  இதை மட்டும் சரியாக செயதீர்களாகில் உங்களுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை தானாகவே கிடைக்கும்."

என்னமோ தெரியவில்லை.  மகரிஷி பதிலெல்லாம் விசித்திரமாக இருக்கின்றனா.  இருந்தாலும் நான் விடவில்லை, கேள்வி தொடுத்தேன்.

"பின்னே என்ன செய்ய வேண்டும்? ஒரு வழி சொல்லுங்களேன்."

தன்னுடைய சொரூபத்தை ஆழ்ந்து விசாரிப்பதாலும் (அத்ம விசாரம்) இடைவிடா த்யானத்தாலும் அக ஓளி பெறலாம்."

"உண்மையை நாடி அடிக்கடி த்யானம் செய்துள்ளேன்.  முன்னேற்றம் இல்லையே?"

"முன்னேற்றமில்லை என்பது உங்களுகெப்படித் தெரியும்?  ஆன்மீக உலகில் தன்னுடைய முன்னேற்றத்தைக் கண்டு உணர்வது எளிதன்று."

"ஒரு குருவின் உதவி அவசியமா?"

"தேவைப்படலாம்."

"நீங்கள் கூறும் வழியின் மூலம் தன்னைத்தானே காண குருவானவர் ஒருவனுக்கு உதவ முடியுமா?"

"ஆன்ம விசாரத்திற்க்குத் தேவையான எல்லா உதவிகளையும் அவரால் தர முடியும்.  இதை சொந்த அனுபவத்தால் கண்டறியலாம்."

குருவின் உதவியால் ஞானம் பெறுவதற்கு எவ்வளவு காலமாகும்?"

"அது சாதகனின் மனபக்குவத்தைப் பொறுத்த விஷயம்.  வெடி மருந்தை ஓர் கணத்தில் பற்ற வைக்கலாம்.  கரியில் நெருப்புப் பிடிக்கவோ வெகு காலமாகும்."

குருநாதர்களைப் பற்றியோ அவர்கள் கையாளும் முறைகளைப் பற்றியோ பேசிக் கொண்டே இருப்பதில் மகரிஷிக்கு விருப்பமில்லை என்று எனக்கு ஒரு வினோதமான உள்ளுணர்வு ஏற்பட்டது.ஆனாலும் நான் ஒரு விடாகண்டனாகையால், இந்த உணர்வைச் சட்டை செய்யாமல் அவரிடம் இதைப்பற்றி இன்னமொரு கேள்வி கேட்டேன். கேள்வி கேட்டதே காதில் விழாதது போன்று முகத்தை வைத்துக் கொண்டு ஜன்னல் பக்கம் தலையைத் திருப்பி, அப்பாலுள்ள மலையின்  பரந்த காட்ச்சிகளைக் கண்டவாறு இருந்தார்.  பதிலுக்கு வேண்டிய அறிகுறியே இல்லை."பேசிக்கொண்டே இராதே, சொன்னதைப் புரிந்து கொள்" என்பதை மௌனமாகக் கூறியது புரிந்தது.  அந்த விஷயத்தை விட்டு வேறே கேள்வி கேட்டேன்.

"தற்பொழுது உலகின் நிலையைக் காணும்பொழுது வேதனையாக இருக்கிறது.  உலகின் எதிர்காலம் எப்படியிருக்குமோ என்ற கவலை உண்டாகிறது.  இதைப் பற்றி மகரிஷிகள் அபிப்ராயம் கூறவேண்டும்."

"எதிர் காலத்தைப் பற்றி ஏன் கவலைபடுகிறீர்கள்?" என்றார் மகரிஷி.  "நிகழ்காலத்தையே நீங்கள் சரியாக அறியவில்லையே! நிகழ்காலத்தைச் சரியாக புரிந்து கொண்டு வாழ்ந்தால், வருங்காலம் தன்னை தானே கவனித்துக் கொள்ளும்."

கேள்வியை என்னிடமே திருப்புகிறார் மகரிஷி;நான் அடங்கிப் போகபோவதில்லை; எனக்கு விடை கிடைத்தே ஆகவேண்டும்; ஏனெனில் மனித வாழ்வின் சிக்கல்களும், துன்பங்களும் மனிதர்களை வாட்டி எடுக்கும் உலகிலிருந்து வருபவன் நான்; இந்த காட்டிற்குள் அமைதியான சூழ்நிலையில் வாழ்வபர்களுக்கு அவ்வளவு பாதிப்பில்லை.

"உலகத்தில் விரைவில் நட்பும் பரஸ்பர உதவியும் நிலவும் சகாப்தம் துவங்கப் போகிறதா அல்லது யுத்தமும், சர்வ நாசமும் எதிர்பார்த்திருக்கின்றனவோ? என்றேன்."

நான் இப்படிக் கேட்டதை மகரிஷி ரசிக்கவில்லை என்று தோன்றியது.  ஆனாலும் பதிலளித்தார்.

"உலகத்தை ஆளும் ஒருவனிருக்கிறான். உலகத்தை ஒழுங்காக நடத்திச் செல்ல வேண்டியது அவன் பொறுப்பு.  உலகத்துக்கு உயிர் கொடுத்தவனுக்கு அதை எப்படிப் பேண வேண்டும் என்பது தெரியும். உலகத்தின் பாரம் அவன் தலைமீதே தவிர உங்கள் மீதல்ல."

"இருந்தாலும், விருப்பு, வெறுப்பு, பாரபட்சமின்றித் தெளிவாக எங்கும் காணும் போது, அந்த ஒருவனின் கருணைப் பார்வை எங்கு விழுகிறதெனத் தெரியவில்லையே." என்று புகார் கூறினேன்.

இந்தக் கேள்வி அவருக்கு பிடிக்கவில்ல என்று நினைத்தேன். ஆனால் விடை தருகிறார்.

"நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே தான் உலகமும் இருக்கும்.  தன்னையே முதலில் அறிந்து கொள்ளாமல் உலகத்தை அறிய முயல்வதால் என்ன பயன்?  சத்தியத்தை நாடுபவர்கள் இதுபோன்ற கேள்விகளில் மனதைச் செலுத்த வேண்டாம்.  அநேகம் பேர்கள் இதுபோன்ற விஷயங்களில் தாங்கள் சக்தியை வீணாக்குகிறார்கள்.  முதலில் உங்களை இயக்கும், உங்களுக்குள் இருக்கும் உணமையைக் கண்டறியுங்கள்; பின்னால் நீங்கள் எதன் ஒரு பகுதியோ அந்த உலகத்தைப் பற்றிய உண்மையை இப்போழுதைவிட நன்றாக உங்களால் அறிய முடியும்."

மகரிஷி பேசுவதைச் சட்டென நிறுத்தினார். நானும் வாய் திறக்கவில்லை.  ஒரு அன்பர் அருகில் வந்து இன்னொரு ஊதுவத்தியைப் பற்ற வைக்கிறார்.  அதன் நீலநிறப் புகை மேலே சுழன்று செல்வதைப் பார்க்கிறார் மகரிஷி. பின் அவரது கைப்ரதிப் புத்தகத்தை எடுத்துப் பிரித்து, விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறார். இப்பொழுது அவர் கவனத்திலிருந்து நான் அகன்று விட்டேன்.

மகரிஷி மறுபடியும் இப்படி என்னிடம் உதாசீனமாகவிருன்தது என் சுயமரியாதையைப் பாதித்தது. தரையில் உட்கார்ந்து ஒரு கால் மணி நேரம் காத்திருந்தேன்.  மேலும் பேசுவாரென்று எனக்குத் தோன்றவில்லை. சரி எங்கள் உரையாடல் முற்றுப் பெற்று விட்டதென்று உணர்ந்து, தரையில் இருந்து எழுந்து நின்று, கைகூப்பி விடை பெற்று அகன்றேன்.

குருவின் திருவடி ............. தொடரும்!

No comments:

Post a Comment