Tuesday, 24 July 2012

தெளிவு குருவின் திருவடி!


"இந்த மனிதர் எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை பெற்று விட்டார்.  அவரை எந்தத் துன்பமும் தீண்ட முடியாது".


என்னை ஆட்கொண்ட எண்ணமிதுதான்.

என்னுள் எழும் கேள்விகளுக்கு ஒலி வடிவம் கொடுத்து அவற்றிற்கு மகரிஷியிடமிருந்து விடைகளைப் பெற மீண்டுமொரு முறை முயன்று பார்க்கத் தீர்மானித்தேன். மகரிஷியின் பக்தர் ஒருவர் ஹாலை அடுத்த குடிசை ஒன்றில் ஏதோ வேலையாக இருந்தார்.  அவர் இவ்வளவு நாட்களாக என்னிடம் மிகவும் அன்பாக இருந்தவர். அவரயடுத்துச் சென்று அவருடைய குருநாதருடன் கடைசியாக ஒருமுறை உரையாட நான் தீவிரமாக விரும்பினேன் என்பதை கூறினேன்.  மகரிஷியிடம் நானே நேராகப் போய் பேசுவதில் எனக்குண்டான கூச்சத்தையும் மனம் விட்டுச் சொன்னேன். அவர் இதைக் கேட்டு மிகவும் ஆதரவாகப் புன்முறுவல் பூத்தார். அவர் உடனே ஹாலுக்குச் சென்றார். விரைவிலேயே நல்ல சேதி கொண்டு வந்தார்.  அவர் குருநாதர் என்னுடன் உரையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி கொள்வாராம்.

நான் ஹாலுக்கு விரைந்தேன்.  சோபாவினருகே உரையாடுவதக்குத் தகுந்த இடமாகப் பார்த்து உட்கார்ந்தேன்.

உடனேயே மகரிஷி முகத்தைத் திருப்பினார்.  அவரது உதடுகளில் ஒரு அன்பான புன்முறுவல் மலர்ந்தது.  உடனேயே என் தயக்கமெல்லாம் மறைந்து நான் சுதந்திரமாக அவரிடம் கேள்விகள் கேட்கலானேன்.

"சத்தியத்தைக் கண்டறிய விரும்புபவன் இந்த உலகத்தைத் துறந்து தனிமையான காடுகளுக்கோ, மலைகளுக்கோ சென்று விட வேண்டுமென யோகிகள் கூறுகிறார்கள்.  எங்கள் மேலை நாடுகளில் நாங்கள் வாழும் முறை வேறுபட்டது.  இப்படியெல்லாம் செய்வது முடியும் காரியமில்லையே.  நீங்கள் யோகிகள் கூறுவதை ஆமோதிக்கிறீர்களா?"

கம்பீரமாக தோற்றமளித்த ஒரு அந்தண பக்தர் பக்கம் திரும்புகிறார் மகரிஷி.  அவர் மகரிஷி கூறியதை எனக்காக மொழி பெயர்த்தார்.

"கர்மா வாழ்க்கையை துறக்க வேண்டிய அவசியமில்லை.  தினமும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் த்யானம் செய்தால், பின் உங்கள் அன்றாடக் கடமைகளில் ஈடுபடுவது, அப்பொழுது எழும் அமைதியான மனநிலை நீங்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுதும், தொடர்ந்து நீடிக்கும்.  த்யான நேரத்து மனநிலை நீங்கள் உலகக் காரியங்களைச் செய்யும் பொழுதும் அவற்றில் பிரதிபலிக்கும்."

"அப்படி செய்வதால் உண்டாகும் விளைவு என்ன?"

"அப்படி செய்து வருங்கால், மனிதர்களிடம் நீங்கள் உறவாடும் விதத்திலும், வாழ்க்கையில் நேரிடும் சம்பவங்கள் மற்றும் உலகப் பொருட்கள் மீது நீங்கள் கொள்ளும் கருத்துக்களிலும் மெல்ல மெல்ல ஒரு மாறுதல் நிகழ்வதைக் காண்பீர்கள்.  உங்கள் செய்கைகளும் த்யானமாகவே ஆகிவிடும், உங்கள் முயர்ச்சியின்றியே".

"அப்படியானால் யோகிகள் கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை, இல்லையா?" மகரிஷியை "ஆம்" அல்லது "இல்லை" என்று சொல்ல வைக்க என் முயற்சி இது.

ஆனால் மகரிஷி நேரடியாக பதில் சொன்னால் தானே!

"தன்னை இந்த உலகத்துடன் பந்தப்படுத்தும் சுயநலச் சிறுமையை விட்டுவிடுதல் வேண்டும்.  பொய்யான "நான்" அதாவது அகந்தையை விட்டு விடுதலே உண்மையான துறவு".

"சுயநலமேயின்றி இவ்வுலகில் செயல்படுவது எப்படி சாத்தியமாகும்?"

"கர்மம், ஞானம் இரண்டிற்கும் இடையே எவ்வித முரண்பாடுமில்லை".

"அப்படியானால் ஒருவன் வழக்கம்போல் தனது தொழில், உத்தியோகம் போன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தாலும் அவன் ஞானம் பெற முடியும் என்கிறீர்களா?"

"ஏன் முடியாது?  ஆனால் ஞானமடைந்தவன், இன்னும் இந்தக் காரியங்களைச் செய்து கொண்டிருப்பது பழைய ஆள்தான் என்று நினைக்க மாட்டான்.  ஏன் என்றால் அவனுடைய அகந்தை மனது மெல்ல மெல்ல மாறி அந்த சிறு மனதிற்கு அதீதமாயுள்ள தனது நிஜஸ்வரூபமாகிய ஆன்மாவில் ஒடுங்கிவிடும்.

"காரியங்களில் ஈடுபட்டுள்ளவனுக்கு, த்யானம் செய்யப் போதிய நேரமிருக்காதே?"

மகரிஷி சிறிது நேரம் மோனம் பாலித்தார், பிறகு விடையளித்தார்.


"த்யானத்திர்க்கென்று நேரம் ஒதுக்குவதெல்லாம் ஆன்மீக சாதனையில் புதிதாகப் பிரவேசித்தவர்களுக்குத்தான் வேண்டும்.சாதனையில் முன்னேறிக் கொண்டு வருபவன், காரியம் செய்கிறானோ செய்யவில்லையோ, ஆழமான அக அமைதியை அனுபவிப்பது நிச்சயம்.  கூட்டத்தின் நடுவிலிருந்துகொண்டு, பணியில் ஈடுபட்டுள்ள பொழுதே அவன் மனது ஏகாந்தத்தில் சாந்தமாக இருக்கும்".

"அப்படியானால் நீங்கள் யோக மார்க்கத்தைப் போதிப்பதில்லையா?"

"யோகியானவன், மாடு மேய்ப்பவன் காளையைத் தடி கொண்டு ஊக்குவிப்பது போன்று, தன் மனதை இலக்கை நோக்கிச் செலுத்துகிறான்.  இந்த மார்கத்திலோவேனில், சாதகன் முரட்டுக் காளையின் முன் பசும் புல்லைக் கட்டியே வழிக்கு கொண்டு வருகிறான்".

"அதை எப்படி செய்வது?"

"நான் யார்" என்ற கேள்வியை உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ள வேண்டும்.  இந்த விசாரம், முடிவில் உங்களை மனதிர்கப்பாலுள்ள ஒன்றைக் கண்டறிய வழி செய்யும்.  அந்தப் பெரும் கேள்விக்கு முதலில் விடை பெறுங்கள்.  அதன்மூலம் பிற கேள்விகளுக்குமே விடை பெறுவீர்கள்".

மகரிஷியின் விடையில் பொதிந்திருந்த ஆழ்ந்த பொருளைப் பற்றிய சிந்தனயிலாழ்ந்தேன்.  ஹாலில் மௌனம் நிலவியது.  அநேக இந்தியக் கட்டிடங்களை போலவே இங்கு சுவரில் பெரிய துளையிட்டு சதுரச் சட்டமும் கம்பியுமிட்டு ஜன்னலாகப் பயன்படுத்துகிறார்கள்.  அதன் வழியாகப் புனித அண்ணாமலையின் கீழ்ச் சரிவுகள் மிக அழகாகத் தெரிந்தன.  அதிகாலை சூரிய ஓளி அதன் விந்தையான வரி வடிவத்தை ரமணியமாக்கியது.

மகரிஷி மறுபடியும் என்னிடம் பேசினார்.

"வேறு விதமாகச் சொல்கிறேன்.  தூய ஆனந்தம் அனுபவிக்க வேண்டுமென்றுதான் எல்லா மனிதர்களும் எப்பொழுதும் விரும்புகிறார்கள்.  முடிவில்லாமல் தொடரும் ஆனந்தத்தைத் தேடி அதைப் பற்றிக் கொள்ள விரும்புகிறார்கள்.  இது ஒரு இயல்பான நாட்டமே.  ஆனால் எல்லோரும் தன்னையே மிக அதிகமாக நேசிக்கிரார்களே, இதைக் கவனித்து ஆச்சரியப்பட்டதில்லையா நீங்கள்?"

"ஆமாம். ஆனால் அதைக் கவனித்ததில்லை......."

"மனிதர்கள் எல்லோரும் ஏதாவது ஒரு சாதனத்தின் மூலம் - தெய்வ நம்பிக்கை மூலமாகவோ அல்லது வேறெந்த வழியிலேயோ - பரம சுகத்தை அடைய எப்பொழுதும் விரும்புகிறார்கள் இல்லையா?  இந்த உண்மையுடன் அதையும் இணைத்துப் பாருங்கள்.  மனிதனின் ஸ்வரூபத்தைப் பற்றி உங்களுக்கு ஒரு தடயம் கிடைக்கும்."

"நீங்கள் கூறுவது எனக்கு புரியவில்லையே!"

மகரிஷி இப்பொழுது குரலை உயர்த்திப் பேசினார்.

"மனிதனின் உண்மை இயல்பு ஆனந்தம்.  நிஜஸ்வரூபத்தில் ஆனந்தம் அதன் உண்மை இயல்பாகவே உள்ளது.  ஆனந்தத்தைத் தேடும் மனிதன் அவனறியாமலேயே தன் நிஜஸ்வரூபத்தைத் தான் தேடுகிறான்.  நிஜஸ்வரூபமாகிய ஆன்மா அழிவற்றது.  எனவே அதை அடையும் ஒருவன் முடிவில்லாத ஆனந்தத்தைப் பெறுகிறான்."

"ஆயின் உலகம் மாபெரும் துக்கத்தில் மூழ்கியிருக்கிறதே?"

"ஆமாம், உலக மக்கள் தம்மையே அறியாதிருப்பதுதான் அதற்குக் காரணம்.  எல்லா மனிதர்களும், தெரிந்தோ, தெரியாமலோ, ஆனந்தத்தையே நாடுகிறார்கள்."

"துஷ்டர்களும், குரூரமானவர்களும், தீமை செய்பவர்களும் கூடவா?" என்றேன்.

"அவர்கள் பாபம் செய்வது கூடத் தாம் செய்யும் ஒவ்வொரு பாபச் செயலிலும் தான் தேடும் சுகத்தை அடைய முயல்வதால்தான்.  இவ்வாறு சுகத்தை நாடுவது மனிதனின் இயல்புதான், ஆனால் சுகத்தைத் தேடும் தாம் தாங்கள் நிஜஸ்வரூபத்தையே தேடுகிறோம் என்பதறியாமல் இதுபோன்ற தீய வழிகள் மூலம் ஒருவேளை அந்த சுகம் கிடைக்குமா என்று முதலில் அவற்றைச் செய்து பார்க்கிறார்கள்.  ஆனால் தவறான செயல்கள், செய்பவனையே பாதிக்கின்றன."

"எனவே நாம் இந்த நிஜஸ்வரூபத்தை அறிந்தால் அழியா ஆனந்தம் பெறுவோமோ?"

மகரிஷி தலையாட்டி ஒப்புதல் தெரிவித்தார்.

திறந்திருந்த சாளரத்தின் வழியாக ஒரு சரிவான சூரிய கரணம் மகரிஷியின் முகத்தின் மீது படிந்தது.  பதட்டமேயற்ற அவர் புருவங்களில் தூய அமைதி நிலவியது.  அந்த உறுதியான அதரங்களில் திருப்தி மிளிர்ந்தது.  அந்தக் காந்தமிகு கண்களில் தேவாலயத்தில் நிலவும் சாந்தி மண்டிக் கிடந்தது.  அவரது தூய ஞானோபதேசத்திர்க்குக் கட்டியங் கூறியது, அவரது சுருக்கமே இல்லாத சுந்தர வதனம்.மகரிஷி பேசியதெல்லாம் மிக எளிய சொற்றொடர்கள்தான்.  அவர் எதை மனதில் வைத்துக் கொண்டு பேசினார்? மொழி பெயர்த்தவர் என்னென்னமோ கூறினார்.  ஆனால் அவரால் தெரிவிக்க முடியாத ஆழ்ந்த பொருள் மகரிஷியின் சொற்களில் பொதிந்திருந்தன.  அதை நான்தான் எனக்காகவே கண்டறிய வேண்டுமென்பதும் தெரிந்தது.  ஒரு தத்துவ அறிஞ்சர் போன்றோ அல்லது ஒரு பண்டிதர் போன்றோ தமது சித்தாந்தத்தை விளக்கி கூருவதர்க்காகச் சொற்களை கையாளுபவர் அல்லர் மகரிஷி. அவரது இதயத்தின் ஆழத்திலிருந்தே, அவரது பெறர்க்கரிய பேரான அத்மானுபூதியின் அடையாளமாகவே அன்றோ சொற்கள் வந்தன!

"நீங்கள் "தான்" "அது" என்று குறிப்பிடுவது எதனை? நீங்கள் கூறுவது உண்மையெனில், மனிதனுக்குள் இன்னொரு "தான்" இருக்கிறதென்று பொருள் படும் இல்லையா?"

மகரிஷி புன்முறுவல் பூத்தார்.

குருவருள் ......... தொடரும்!