Thursday, 17 May 2012

தெளிவு குருவின் திருவடி!


கோவிலை சுற்றி பார்க்க விரும்பியதால், சென்று தரிசனம் பெற்று ஆஸ்ரமத்துக்கு திரும்பியபோது, இரவாகிவிட்டது.  ஆஸ்ரம தோட்டத்தில் மின்மினிப் பூச்சிகள் அங்குமிங்கும் சுற்றிப் பறக்கின்றன.  அப்பொழுது இருட்டின் பின் திரை மீது வினோதமான ஓளி கோலங்களை அவை வரைவதைப் பார்த்துக் கொண்டே தென்னை மரங்களால் சூழப்பட்ட ஆஸ்ரம முற்றத்திற்குள் நுழைகிறோம்.  ஹாலில் புகுந்து தரை மீது ஒரு ஆசனத்தில் அமர்ந்தேன்.  நான் வழியில் நுகர்ந்த உன்னதமான மோன அமைதி அங்கும் வியாபகமாகப் பரவி நிற்பதை உணர்ந்தேன்.


அங்கு கூடியிருந்த அன்பர்கள் தரைமேல் வரிசை வரிசையாக அமர்ந்திருந்தனர்,  எவ்விதமான அரவமோ, பேச்சோ இல்லை.  கால்களை மடித்துக் கொண்டு மூலையில் இருந்த சோபா மீது மகரிஷி அமர்ந்திருந்தார்.  அவரது முழங்கால்கள் மேல் அவர் உள்ளங்கைகள் படிந்திருப்பது அவருக்கே தெரியுமோ என்னவோ! என்ன எளிமை! என்ன அடக்கம்! ஆனாலும் என்ன பெரும்தன்மை, கண்ணியம்!  பண்டைய கிரேக்கத் தத்துவஞானி போன்று அவரது தலை நிமிர்ந்து அசைவின்றி நின்றது.  ஹாலின் எதிர் கோடியை அவரது கண்கள் சலனமின்றி நோக்கியவாறு இருந்தன,  அந்த அபூர்வமான சலனமின்மை எனக்கு இப்பொழுதும் ஒரு புதிராகவே இருந்தது,  விண்ணில் மாலையின் அந்திம ஒளிக்கதிர் மறைவதைச் சாளரத்தின் வழியாகக் கவனித்துக் கொண்டிருக்கிறாரா அல்லது இந்த பௌதீக உலகின் ஸ்மரணை கூட இல்லாமல் கனவு போன்ற ஒரு கற்பனை உலகில் முற்றிலும் ஆழ்ந்துள்ளாரா?

வழக்கம் போலவே ஊதுவத்தியின் புகை கூட்டம் எழும்பிக் கூரையின் உத்திரங்களில் முகில்கள் போன்று மிதக்கிறது.  என்னை ஆச்வாசபடுத்திக் கொண்டு மகரிஷி மீது என் பாரிவையை நிலை நிறுத்தினேன்.  ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு கண்களை மூட வேண்டும் போல் தோன்றவே கண் மூடினேன்.  மகரிஷியின் சான்னித்யத்தில் ஆழமாக ஊடுருவிய சூட்சுமமான அமைதி என்னைத் தாலாட்டி வேகமாக அரைத் தாக்கத்தில் அழுத்தியது.  இப்படியே சற்று நேரம் அரை நனவில் இருந்தேன்.  பிறகு நனவிலிருந்து நழுவி ஒரு நனவொத்த கனாக் கண்டேன்.

கனவில் நான் ஐந்து வயதுப் பாலகனானேன்.  மகரிஷியின் கையைப் பிடித்தவாறே புனித அருணாச்சல மலைமீது வளைந்து செல்லும் ஒரு கரடு முரடான பாதையில் நிற்கிறேன்.  ஆனால் அவர் என்னருகில் நெடிதுயர்ந்து நிற்பதைக் கண்டால் பலமடங்கு வளர்ந்துயர்ந்து விட்டார் போன்று தோன்றுகிறது.  ஆஸ்ரமத்திலிருந்து என்னை அழைத்துக் கொண்டு அந்த இரவின் மையிருட்டில் அந்தப் பாதை வழியாக செல்கிறார்.  இருவரும் மெதுவாகச் செல்கிறோம்.  சற்று நேரம் கழித்து சந்திரனும், தாரகைகளும் எங்களைச் சுற்றி ஒரு மங்கிய ஓளி தந்தன.  எப்பொழுது விழுமோ என்றவாறு நிலையற்று நின்ற பூதகரமான பாறைகளுக்கு நடுவிலும், கற்பாதையில் பிளவுகள் தென்பட்ட போதிலும், மகரிஷி எவ்வளவு ஜாக்கிரதையாக என்னை நடத்திச் சென்றார் என்பதைக் கவனித்தேன்,  மலையோ செங்குத்தானது.  எங்கள் ஏற்றம் வெகு நிதானம்.  பாறைகளுக்கு நடுவே குறுகிய பிளவுகளிலும், குட்டையான புதர்க் கூட்டங்களின் கீழேயும் மறைந்திருந்த சின்னசிறு ஆச்ரமங்களும், மனிதர் வாழ் குகைகளும் எங்கள் பார்வையில் பட்டன.

அவற்றைக் கடந்து நாங்கள் வெளியே செல்லும்பொழுது அவற்றுள் வசிப்பவர்கள் வெளியே வந்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.  அந்த தாரகைகளின் மங்கலான வெளிச்சத்தில் அவர்கள், நிழலுருவங்கலாகத் தோன்றினாலும், அவர்கள் உண்மையில் பல வகையான யோகியரே என இனங்கண்டு கொண்டேன்.  நாங்கள் எங்கும் நிற்காமல் தொடர்ந்து நடந்து அருணாச்சலத்தின் சிகரத்தை அடைந்தபிறகே நின்றோம்.  ஏதோ ஒரு மிக மிக முக்கியமான சம்பவம் எனக்கு நிகழப் போகிறதென்ற, இன்னதென்று புரியாத ஒரு எதிர்ப்பார்ப்புடன் என் இதயம் படபடத்தது.

மகரிஷி முகத்தைத் திருப்பி தனது கண்களை மிகவும் தாழ்த்தி என் முகத்தில் தனது பார்வையைச் செலுத்தினார்.  நானும் மிக ஆவலுடன் அவரை அண்ணாந்து நோக்கினேன்.  எனது இதயத்திலும் உள்ளத்திலும் ஒரு இனம் தெரியாத மாறுதல் வெகு வேகமாக நடந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன்.  என்னை இதுகாறும் ஆசை காட்டி ஆட்டிப்படைத்த உள்நோக்கங்களும், தாபங்களும் என்னை விட்டு அகலத் துவங்கின. என்னை இங்குமங்கும் அலைக்கழித்துக் கலங்க வைத்த ஆசைத் தூண்டில்கள் எல்லாம் வியத்தகு விரைவுடன் மறைந்தன.  எனது உற்றார் சுற்றாருடன் நான் கொண்டிருந்த உறவுகளைப் பாதித்த வெறுப்புகள், மனஸ்தாபங்கள், சிறுமைகள், சுயநலங்கள் யாவும் வெறுமையின் அதல பாதாளத்தில் போய் விழுந்து மறைந்தன,  ஒரு சொல்லொண்ணா அமைதி என்னுள் விரிந்து மலர்ந்தது.  இதற்குமேல் நான் வாழ்வில் எதுவும் வேண்டேன் என்று தெளிவாயிற்று.

சட்டென மகரிஷி என்னை மலையடிவாரத்தின் மீது என் பார்வையைச் செலுத்துமாறு பணித்தார்.  சொன்னபடியே நான் செய்தேன்.  நான் கண்டதென்ன! என்ன ஆச்சரியம்! கீழே அடிவாரத்தில் பூகோளத்தின் மேற்கத்திய அர்த்த கோலமே அங்கு நீண்டு விரிந்து கிடந்தது.  கோடிக்கணக்கான மக்கள் கூட்டத்தை அங்குக் கண்டேன்.  அவர்கள் மீது இரவின் இருட்டுக் கம்பளம் படிந்திருப்பினும், நான் அவற்றை உருவங்களின் திரளாக ஒருவாறு தெரிந்து கொண்டேன்.

மகரிஷியின் குரல் என் காதில் ஒலித்தது.  சொற்கள் மிக நிதானமாக வந்தன.

"நீங்கள் அங்குத் திரும்பிச் செல்லும்பொழுது, இக்கணம் நீங்கள் காணும் அக அமைதி அங்கும் தொடரும்.  ஆனால், அதற்காக ஒன்று மட்டும் நீங்கள் செய்தாக வேண்டும்.  "நான் இந்த உடல்", "நான் இந்த புத்தி" என்ற எண்ணத்தை இனிமேல் உதறி எறிந்து விட வேண்டும்.  இந்த அக அமைதி உங்களுள் ஆறுபோல் பாயும் பொழுது நீங்கள் அதுவாக ஆகிவிடுவதால் "நான்" என்ற தனித்தன்மையை இழக்க வேண்டியிருக்கும்.  "நான்" போனால் "தான்" ஆகலாம்.

அத்துடனே மகரிஷி ஒரு ஒளிக்கதிரின் ஒரு முனையை என் உள்ளங்கையில் இட்டார்.

இந்த அசாதாரண வகையில் நனவு போன்ற கனவில் இருந்து நான் மீண்டும் நனவுக்கு வந்தபொழுது அதன் உன்னதமான அனுபவம் என்னை ஊடுருவி வியாபிக்கும் உணர்வு தொடர்ந்து நீடித்தது.  நான் விழித்த கணமே மகரிஷியின் கண்கள் என் கண்களைச் சந்தித்தன.  அவர் முகம் என்னை நோக்கித் திரும்பியுள்ளது.  அவர் பார்வை என் கண்களுக்குள்ளே நிலைத்து நிற்கிறது.

அந்தக் கனவின் பொருள் என்ன? எனது சொந்த வாழ்வின் ஆசைகளும் நிராசைகளும் சிறிது நேரம் இல்லது போயின.  "நான்" என்று நானறிந்த என் மேல் கனவில் எனக்கேர்ப்பட்ட உதாசீனமும், பிற மனிதர்பால், கனவில் மலர்ந்த உணர்ச்சியும், நான் விழித்த பிறகு அகன்று விடவில்லை.  அது அபூர்வமான அனுபவம்.

ஆனால் ஒன்று.  இந்த கணவனுபவத்தில் நிஜமாகவே ஏதேனும் இருந்தால் கூட அது நிலைக்காது.  அந்த நேரம் எனக்கு இன்னும் வரவில்லை.

எவ்வளவு காலம் கனவில் மூழ்கியிருந்தேனோ?  ஹாலில் இருந்த அனைவரும் எழுந்து படுத்து உறங்குவதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தனர்.  நானும் படுத்துரங்கத் தயாரானேன்.

அந்த நீண்ட காற்றோட்ட வசதி குறைந்த ஹாலில் மிகவும், புழுக்கமாக இருந்ததால், வெளியே முற்றத்தில் படுக்கத் தீர்மானித்தேன்.  நரை தாடியுள்ள அன்பரொருவர் லாந்தர் விளக்கைப் பொருத்திக் கொடுத்து, அதைப் படுக்கையினருகே விடியுமட்டும் அணைக்காமல் வைத்திருக்கும்படி கூறினார்.  பாம்பு அல்லது சிறுத்தை போன்ற அழையா விருந்தாளிகள் வரக் கூடுமாதலால், விளக்கை ஏற்றி வைப்பது நல்லது; பொதுவாக விளக்கு எரிந்து கொண்டிருக்கும் இடத்திற்கு அவை வருவதில்லை.

கடினமான தரையில் மெத்தயின்றி படுத்ததால் தூக்கம் வர சில மணி நேரங்களாயிற்று.  மெதுவாக வரட்டுமே! அசைபோடுவதர்க்குத் தாராளமாக நினைவுகள் நிறைந்திருந்தன.  ஏனெனில் மகரிஷிகளைப் போன்ற ஒரு அபூர்வமான மனிதரை என் வாழ்நாளில் இதுவரை நான் கண்டதில்லை.

எனது வாழ்வில் மிக முக்கியமான திருப்பம் ஏற்படுத்தக் கூடிய ஏதோ ஒன்று மகரிஷிகளிடம் உள்ளதென்று தெரிந்தாலும், அது எப்படிப்பட்டது என்று எனக்குப் பிடிபடவில்லை.  அது புலன்களுக்குப்பார்ப்பட்டது; சிந்தனைக்கும் எட்டாதது; அது ஆன்மீகமான ஒன்றாக இருக்கலாம்.  அந்த இரவு நேரத்தில் அவரை நினைக்கும் பொழுதெல்லாம், நான் கண்ட நனவு போன்ற அந்த கனவை நினைவுகூரும் பொழுதெல்லாம், இனம் தெரியாத ஒரு விசித்திரமான உணர்ச்சி என்னுள் புகுந்து என் இதயத்தை ஏதோ மகத்தான இன்னதென்று சொல்ல முடியாத அனுபவத்தை எதிர் பார்த்துப் பட படக்க வைத்தது.

அடுத்த நாட்களில் மகரிஷியிடம் நெருங்கிப் பழக முயன்றேன்.  முயற்ச்சிகள் பலிக்கவில்லை.  இதற்கு மூன்று விதமான காரணங்கள் இருந்தன.  முதலாவதாக மகரிஷியிடம் பேச்சு, இல்லை எனுமளவிற்க்குக் குறைவு.  சல சலப்பு என்ற பேச்சு கிடையாது.  தர்க்கங்களிலும், வாதப் பிரதிவாதங்களிலும் அவருக்கு விருப்பம் கிடையாது.  கோட்பாடுகளிலும் அவர் கவனம் போவதே கிடையாது.  மேலும் தனது எண்ணங்கள் யாவையாகிலும் பிறர் அவற்றை ஏற்ற்றுக் கொள்ள வேண்டுமென்ற விருப்பமோ, தனக்குச் சீடர்கள் ஏற்படுத்திக் கொள்ளும் ஆசையோ மகரிஷிகளிடம் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.

இரண்டாவது காரணம் நிச்சயமாக விநோதமானது.  ஆனாலும் உணமையானது.

குருவருள் ............................. தொடரும்!

Thursday, 3 May 2012

தெளிவு குருவின் திருவடி!


மொழிபெயற்பாளரை விட்டு, என்னிடம் நேராக ஆங்கிலத்தில் மெதுவாகப் பேசினார்.  "நான் என்கிறீர்கள்.  நான் அறிய விரும்புகிறேன் என்கிறீர்கள்.  அந்த நான் என்பது யார், சொல்லுங்கள்".

இவர் என்ன சொல்லுகிறார் தெரியவில்லையே?  இவருடைய ஆங்கிலந்தான் எனக்கு புரியவில்லையா? என்று குழம்பினேன்.

உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லையே? என்றேன், வேறு வழி இல்லாமல்.

புரியவில்லையா?  கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்!

மகரிஷியின் சொற்கள் மறுபடியும் எனக்குப் புதிதாகவே இருந்தன.  என்ன பதில் சொல்வது? சட்டென்று ஒரு எண்ணம் கை கொடுத்து உதவியது.  விரலால் என்னைச் சுட்டிக் காட்டி, என் பெயரை சொன்னேன்.

"உங்களுக்கு அவரைத் தெரியுமா?  என்றார் புன் முறுவலுடன்."

"பிறந்ததிலிருந்தே தெரியுமே!" என்றேன் பதிலுக்கு புன்முறுவலுடன் நான்.

"ஆனால் அது உங்களுடைய உடல்தானே! நான் கேட்டதைத் திரும்பவும் சொல்கிறேன்.  சொல்லுங்கள், நீங்கள் யார்?"

இந்த அபூர்வமான கேள்விக்கு எனக்கு உடனடியாக ஒரு பதிலும் தோன்றவில்லை.

மகரிஷி தொடர்ந்தார்.

முதலில் அந்த "நான்" என்பது யார் என்று தெரிந்து கொள்ளுங்கள், பிறகு உண்மை விளங்கும்.

என்ன இது?  புதிருக்கு மேலே புதிராகப் போடுகிறாரே! என்று விழித்தேன்.  மனது வேலை செய்ய மறுத்தது.  வாய்விட்டுச் சொன்னேன் என் நிலையை.  மகரிஷிக்கு இப்பொழுது மொழி பெயர்ப்பாளர் உதவி தேவைப்பட்டது.  அவரது பதில் எனக்கு மெதுவாக ஆங்கிலத்தில் சொல்லப்பட்டது.

"வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை, உங்களுக்குள்ளேயே பாருங்கள்.  இதை மட்டும் சரியாக செயதீர்களாகில் உங்களுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை தானாகவே கிடைக்கும்."

என்னமோ தெரியவில்லை.  மகரிஷி பதிலெல்லாம் விசித்திரமாக இருக்கின்றனா.  இருந்தாலும் நான் விடவில்லை, கேள்வி தொடுத்தேன்.

"பின்னே என்ன செய்ய வேண்டும்? ஒரு வழி சொல்லுங்களேன்."

தன்னுடைய சொரூபத்தை ஆழ்ந்து விசாரிப்பதாலும் (அத்ம விசாரம்) இடைவிடா த்யானத்தாலும் அக ஓளி பெறலாம்."

"உண்மையை நாடி அடிக்கடி த்யானம் செய்துள்ளேன்.  முன்னேற்றம் இல்லையே?"

"முன்னேற்றமில்லை என்பது உங்களுகெப்படித் தெரியும்?  ஆன்மீக உலகில் தன்னுடைய முன்னேற்றத்தைக் கண்டு உணர்வது எளிதன்று."

"ஒரு குருவின் உதவி அவசியமா?"

"தேவைப்படலாம்."

"நீங்கள் கூறும் வழியின் மூலம் தன்னைத்தானே காண குருவானவர் ஒருவனுக்கு உதவ முடியுமா?"

"ஆன்ம விசாரத்திற்க்குத் தேவையான எல்லா உதவிகளையும் அவரால் தர முடியும்.  இதை சொந்த அனுபவத்தால் கண்டறியலாம்."

குருவின் உதவியால் ஞானம் பெறுவதற்கு எவ்வளவு காலமாகும்?"

"அது சாதகனின் மனபக்குவத்தைப் பொறுத்த விஷயம்.  வெடி மருந்தை ஓர் கணத்தில் பற்ற வைக்கலாம்.  கரியில் நெருப்புப் பிடிக்கவோ வெகு காலமாகும்."

குருநாதர்களைப் பற்றியோ அவர்கள் கையாளும் முறைகளைப் பற்றியோ பேசிக் கொண்டே இருப்பதில் மகரிஷிக்கு விருப்பமில்லை என்று எனக்கு ஒரு வினோதமான உள்ளுணர்வு ஏற்பட்டது.ஆனாலும் நான் ஒரு விடாகண்டனாகையால், இந்த உணர்வைச் சட்டை செய்யாமல் அவரிடம் இதைப்பற்றி இன்னமொரு கேள்வி கேட்டேன். கேள்வி கேட்டதே காதில் விழாதது போன்று முகத்தை வைத்துக் கொண்டு ஜன்னல் பக்கம் தலையைத் திருப்பி, அப்பாலுள்ள மலையின்  பரந்த காட்ச்சிகளைக் கண்டவாறு இருந்தார்.  பதிலுக்கு வேண்டிய அறிகுறியே இல்லை."பேசிக்கொண்டே இராதே, சொன்னதைப் புரிந்து கொள்" என்பதை மௌனமாகக் கூறியது புரிந்தது.  அந்த விஷயத்தை விட்டு வேறே கேள்வி கேட்டேன்.

"தற்பொழுது உலகின் நிலையைக் காணும்பொழுது வேதனையாக இருக்கிறது.  உலகின் எதிர்காலம் எப்படியிருக்குமோ என்ற கவலை உண்டாகிறது.  இதைப் பற்றி மகரிஷிகள் அபிப்ராயம் கூறவேண்டும்."

"எதிர் காலத்தைப் பற்றி ஏன் கவலைபடுகிறீர்கள்?" என்றார் மகரிஷி.  "நிகழ்காலத்தையே நீங்கள் சரியாக அறியவில்லையே! நிகழ்காலத்தைச் சரியாக புரிந்து கொண்டு வாழ்ந்தால், வருங்காலம் தன்னை தானே கவனித்துக் கொள்ளும்."

கேள்வியை என்னிடமே திருப்புகிறார் மகரிஷி;நான் அடங்கிப் போகபோவதில்லை; எனக்கு விடை கிடைத்தே ஆகவேண்டும்; ஏனெனில் மனித வாழ்வின் சிக்கல்களும், துன்பங்களும் மனிதர்களை வாட்டி எடுக்கும் உலகிலிருந்து வருபவன் நான்; இந்த காட்டிற்குள் அமைதியான சூழ்நிலையில் வாழ்வபர்களுக்கு அவ்வளவு பாதிப்பில்லை.

"உலகத்தில் விரைவில் நட்பும் பரஸ்பர உதவியும் நிலவும் சகாப்தம் துவங்கப் போகிறதா அல்லது யுத்தமும், சர்வ நாசமும் எதிர்பார்த்திருக்கின்றனவோ? என்றேன்."

நான் இப்படிக் கேட்டதை மகரிஷி ரசிக்கவில்லை என்று தோன்றியது.  ஆனாலும் பதிலளித்தார்.

"உலகத்தை ஆளும் ஒருவனிருக்கிறான். உலகத்தை ஒழுங்காக நடத்திச் செல்ல வேண்டியது அவன் பொறுப்பு.  உலகத்துக்கு உயிர் கொடுத்தவனுக்கு அதை எப்படிப் பேண வேண்டும் என்பது தெரியும். உலகத்தின் பாரம் அவன் தலைமீதே தவிர உங்கள் மீதல்ல."

"இருந்தாலும், விருப்பு, வெறுப்பு, பாரபட்சமின்றித் தெளிவாக எங்கும் காணும் போது, அந்த ஒருவனின் கருணைப் பார்வை எங்கு விழுகிறதெனத் தெரியவில்லையே." என்று புகார் கூறினேன்.

இந்தக் கேள்வி அவருக்கு பிடிக்கவில்ல என்று நினைத்தேன். ஆனால் விடை தருகிறார்.

"நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே தான் உலகமும் இருக்கும்.  தன்னையே முதலில் அறிந்து கொள்ளாமல் உலகத்தை அறிய முயல்வதால் என்ன பயன்?  சத்தியத்தை நாடுபவர்கள் இதுபோன்ற கேள்விகளில் மனதைச் செலுத்த வேண்டாம்.  அநேகம் பேர்கள் இதுபோன்ற விஷயங்களில் தாங்கள் சக்தியை வீணாக்குகிறார்கள்.  முதலில் உங்களை இயக்கும், உங்களுக்குள் இருக்கும் உணமையைக் கண்டறியுங்கள்; பின்னால் நீங்கள் எதன் ஒரு பகுதியோ அந்த உலகத்தைப் பற்றிய உண்மையை இப்போழுதைவிட நன்றாக உங்களால் அறிய முடியும்."

மகரிஷி பேசுவதைச் சட்டென நிறுத்தினார். நானும் வாய் திறக்கவில்லை.  ஒரு அன்பர் அருகில் வந்து இன்னொரு ஊதுவத்தியைப் பற்ற வைக்கிறார்.  அதன் நீலநிறப் புகை மேலே சுழன்று செல்வதைப் பார்க்கிறார் மகரிஷி. பின் அவரது கைப்ரதிப் புத்தகத்தை எடுத்துப் பிரித்து, விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறார். இப்பொழுது அவர் கவனத்திலிருந்து நான் அகன்று விட்டேன்.

மகரிஷி மறுபடியும் இப்படி என்னிடம் உதாசீனமாகவிருன்தது என் சுயமரியாதையைப் பாதித்தது. தரையில் உட்கார்ந்து ஒரு கால் மணி நேரம் காத்திருந்தேன்.  மேலும் பேசுவாரென்று எனக்குத் தோன்றவில்லை. சரி எங்கள் உரையாடல் முற்றுப் பெற்று விட்டதென்று உணர்ந்து, தரையில் இருந்து எழுந்து நின்று, கைகூப்பி விடை பெற்று அகன்றேன்.

குருவின் திருவடி ............. தொடரும்!